மழைக்காலத்திற்குள் தண்ணீர் தடையின்றி செல்ல வடிகால் வாய்க்காலை தூர்வார வேண்டும் நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகளுக்கு கலெக்டர் மோகன் உத்தரவு


மழைக்காலத்திற்குள்  தண்ணீர் தடையின்றி செல்ல வடிகால் வாய்க்காலை தூர்வார வேண்டும்  நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகளுக்கு கலெக்டர் மோகன் உத்தரவு
x
தினத்தந்தி 8 Oct 2022 6:45 PM GMT (Updated: 8 Oct 2022 6:47 PM GMT)

மழைக்காலத்திற்குள் வடிகால் வாய்க்காலை தூர்வாரி தண்ணீர் தடையின்றி செல்லும் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகளுக்கு கலெக்டர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம்


விழுப்புரம் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைகூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே மழைநீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து அப்பகுதிகளில் மழைநீர் தேங்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள் மேற்கொள்வதோடு மட்டுமல்லாமல் எதிர்பாராதவிதமாக அதிகப்படியான மழைநீர் பெய்து தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கினால் உடனடியாக மழைநீரை வெளியேற்றுவதற்கு தேவையான ஜெனரேட்டர் எந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

வாய்க்காலை தூர்வார

மழைநீர் வடிகால் வாய்க்கால், கழிவுநீர் கால்வாய்கள் போன்றவற்றை முறையாக தூர்வாரி மழைநீர் தங்கு தடையின்றி சென்றிடும் வகையில் பணிகள் மேற்கொள்ள வேண்டும். ஏரி, குளங்களில் உள்ள கரைகளை பலப்படுத்துவதோடு மணல் மூட்டைகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மழை பொழியும் நேரங்களில் அவ்வப்போது ஏரி, குளங்களில் நீர்மட்டத்தை கண்காணித்து கரையோரப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முறையான அறிவிப்பை தெரியப்படுத்தி அவர்களை பாதுகாப்பாக தங்க வைத்து உணவு, உடை, மருந்து உள்ளிட்ட வசதிகளை செய்ய வேண்டும்.

மேலும் சாலையோரம், குடியிருப்பு பகுதிகளில் எதிர்பாராதவிதமாக மரங்கள் விழுந்தால் உடனடியாக மரங்களை அப்புறப்படுத்த மரம் அறுக்கும் எந்திரம், ரம்பம் உள்ளிட்டவற்றோடு ஜே.சி.பி. எந்திரங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பேரூராட்சி பகுதிகளில் அரசு வீடு கட்டும் பணியினை விரைந்து முடிக்க வேண்டும். நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் சாலைப்பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு நோய்தொற்று ஏற்படாதவாறு பொது கழிப்பிடத்தை நாள்தோறும் சுகாதாரமான முறையில் தூய்மைப்படுத்த வேண்டும். ஒவ்வொரு பஸ் நிலையத்திலும் உள்ள பொது கழிப்பிடம், பயணிகள் அமரும் இருக்கைகள் உள்ளிட்டவற்றை சுகாதாரமாக பராமரிப்பதோடு மட்டுமல்லாமல் குடிதண்ணீர் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். பேரூராட்சி பகுதிகளில் திறந்தவெளி கிணறு அமைத்தல், குடிநீர் இணைப்பு வழங்குதல், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல், ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுதல் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story