திரவுபதியம்மன் கோவில் 72 அடி உயர தேரோட்டம்


திரவுபதியம்மன் கோவில் 72 அடி உயர தேரோட்டம்
x
தினத்தந்தி 2 Jun 2023 12:15 AM IST (Updated: 2 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

முடியனூர் திரவுபதியம்மன் கோவில் 72 அடி உயர தேரோட்டம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் தேரை தங்களது தோளில் சுமந்து சென்றுவந்தனர்.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்,

தியாகதுருகம் அருகே முடியனுர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் தேர்திருவிழா நடைபெறுவது வழக்கம். மற்ற கோவில்களில் தேர்திருவிழாவின் போது தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து செல்வது வழக்கம். ஆனால் இந்த கோவிலில் தேரை பக்தர்கள் தங்களது தோளில் சுமந்து சென்று வருவது சிறப்பம்சம் ஆகும். அதன்படி திரவுபதியம்மன் கோவிலில் இந்தாண்டுக்கான விழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதனை தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் வீதிஉலா நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து திருக்கல்யாண உறசவம் நடைபெற்றது.

3 டன் எடைகொண்ட தேர்

பின்னர் மூங்கீல் மற்றும் தேக்கு கழிகளை கொண்டு செய்யப்பட்ட 72 அடி உயர தேரில் சிறப்பு அலங்காரத்தில் அர்ஜுனன், திரவுபதியம்மன் எழுந்தருளினர். அதனை தொடர்ந்து அங்கிருந்த பக்தர்கள் 3 டன் எடை கொண்ட 7 அடுக்கு தேரை தங்களது தோளில் சுமந்து சென்றனர். இந்த தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று வந்தது. விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பு இளங்கோவன் ஊர் முக்கியஸ்தர்கள், விழா குழுவினர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story