திராவிடர் கழக மாநாட்டை தடை செய்ய வேண்டும் -பா.ஜ.க. வலியுறுத்தல்
திருவாரூரில் 4-ந் தேதி நடைபெற உள்ள திராவிடர் கழக மாநாட்டை தடை செய்ய வேண்டும் பா.ஜ.க. வலியுறுத்தல்.
சென்னை,
தமிழக பா.ஜ.க. துணைத்தலைவர் தி.நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருவாரூரில் வரும் 4-ந் தேதி சனாதன எதிர்ப்பு மாநாடு நடத்த போவதாக திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. சனாதனம் என்பது இந்து மதத்தையே குறிக்கிறது என்பது உலகறிந்த உண்மை. அதாவது, இந்து மதத்தையும், இந்து மத நம்பிக்கைகளையும், இந்து கடவுள்களையும் இழித்தும், பழித்தும் பேசுவதற்காகவே இந்த மாநாடு என்பதும், இதில் தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் சிலர் பங்கேற்க போவதாகவும் சொல்லப்படுகிறது. மத துவேஷத்தை பரப்பி, மத மோதல்களை உருவாக்க திராவிடர் கழகம் மற்றும் சில அரசியல் கட்சிகள் திட்டமிட்டு உள்ளதாக தெளிவாக தெரிகிறது. சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்தது போல், மத உணர்வுகளை புண்படுத்த முற்படும் இந்து மத எதிர்ப்பு மாநாட்டுக்கு தடை விதித்து நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன். தமிழக காவல் துறை இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளுக்கு அனுமதி மறுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.