திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்


திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்
x
தினத்தந்தி 13 July 2022 7:00 PM GMT (Updated: 13 July 2022 7:00 PM GMT)

நாமக்கல்லில் தி.மு.க. சார்பில் திராவிட மாடல் பயிற்சி கூட்டம் நடந்தது. இதில் திருச்சி சிவா எம்.பி. கலந்து கொண்டார்.

நாமக்கல்

நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நேற்று நாமக்கல்லில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி. தலைமை தாங்கினார். செய்தி தொடர்பு மாநில துணை செயலாளர் அமுதரசன் முன்னிலை வகித்து பேசினார். இதில் தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

திராவிட குடும்பம் என்பது 4, 5 மொழிகளை உள்ளடக்கிய ஒரு குடும்பம். இது தனிப்பெரும் இனமாக வாழ்ந்தது. உலகத்தில் மூத்த இனம் திராவிட இனம். ஆனால் திராவிடம் என்ற சொல் ஆங்கிலேயர்களால் கண்டுபிடிக்கப்பட்டது என்று நம்முடைய மாநில கவர்னர் சொல்கிறார். ஆங்கிலேயர்களின் வேலை அது அல்ல.

இந்த இயக்கத்தில் ஏன் இணைகிறோம் என்கிற தெளிவு உங்களுக்கு ஏற்பட வேண்டும். யாராவது கீழ் நடையில் நம்மிடம் பேசினால், நாமும் அந்த நடைக்கு இறங்க கூடாது. மாறாக நாம் தருகின்ற அறிவுபூர்வமான விளக்கம் அவர்களை மனம் மாற செய்து அவர்களை நம்மிடம் அழைத்து வர வேண்டும். அது உங்களால் தான் முடியும். அப்படி செய்ய வேண்டும் என்பதற்கு உங்களை பக்குவபடுத்துகின்ற மன்றமாக இதை நாங்கள் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து அவர் தி.மு.க.வின் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் உறுப்பினர்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து விளக்கி பேசினார். இதில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கதிர்வேல், துணை அமைப்பாளர்கள் காந்தி என்கிற பெரியண்ணன், இளம்பரிதி, நந்தகுமார், ஆனந்தகுமார் மற்றும் மாணவர் அணியினர், தகவல் தொழில்நுட்ப அணியினர் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story