அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதே திராவிட மாடல் ஆட்சியின் சிறப்பு அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு


அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதே திராவிட மாடல் ஆட்சியின் சிறப்பு    அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு
x

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதே திராவிட மாடல் ஆட்சியின் சிறப்பு என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசினார்.

விழுப்புரம்


விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறுபான்மையினர் நலத்துறை ஆணையர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் மோகன் முன்னிலை வகித்தார். சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் கலந்துகொண்டு, மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

திராவிட மாடல்

தமிழ்நாடு முதல்-அமைச்சர், ஒவ்வொரு துறையிலும் புதிய திட்டங்களை அறிவித்து நலத்திட்ட உதவிகளை வழங்கி பொதுமக்களின் நலனை காப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார்.

சிறுபான்மையின மக்கள் நலன் கருதி உருவாக்கப்பட்ட திட்டங்கள் அத்தனையும் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதுதான் முதல்-அமைச்சரின் நோக்கம். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சிறப்பாகும்.

பராமரிப்பு பணிகள்

மேலும் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் இஸ்லாமிய பள்ளிவாசல்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ள ஏதுவாக தலா ரூ.6 கோடியை முதல்-அமைச்சர் வழங்கியுள்ளார். அவ்வாறு வழங்கப்பட்ட நிதியுதவியின் அடிப்படையில் மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் உள்பட சுற்றுச்சுவர் அமைத்தல், குடிநீர் வசதி ஏற்படுத்துதல், கழிவறை வசதி ஏற்படுத்துதல், சாலை வசதி போன்ற திட்டங்களும் இதன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிறிஸ்தவ தேவாலயத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கான நலவாரியம் அமைக்கப்பட வேண்டும் என ஆய்வுக்கூட்டத்தில் கோரிக்கை வைத்தேன். அந்தப்பணியும் தற்போது தொடங்குகிற நிலை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதேபோல் ஜெருசலம் புனித பயணம் மேற்கொள்ளும் ஆண்களுக்கு ரூ.32,000 இணை மானியமும், பெண்களுக்கு ரூ.60,000 இணை மானியமும், புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கு இந்த ஆண்டு தலா ரூ.27,000 இணை மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையானது அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இதுதவிர நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு சைக்கிள் வழங்குகின்ற திட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மகளிர் திட்ட இயக்குனர் காஞ்சனா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரகுபதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story