திராவிடத்தையும், ஆன்மிகத்தையும் பிரிக்க முடியாது


திராவிடத்தையும், ஆன்மிகத்தையும் பிரிக்க முடியாது
x

திராவிடத்தையும், ஆன்மிகத்தையும் பிரிக்க முடியாது என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற தி.மு.க. அனைத்து அணி நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

திருவண்ணாமலை

திராவிடத்தையும், ஆன்மிகத்தையும் பிரிக்க முடியாது என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற தி.மு.க. அனைத்து அணி நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

நிர்வாகிகள் கூட்டம்

திருவண்ணாமலை திருக்கோவிலூர் ரோடு, சாரோனில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் திருவண்ணாமலை வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. அனைத்து அணிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் தலைமை தாங்கினார்.

சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், எஸ்.அம்பேத்குமார், ஒ.ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எவரெஸ்ட் ந.நரேஷ்குமார் வரவேற்றார்.

கூட்டத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரும் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமான எ.வ.வேலு கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

பிரிக்க முடியாது

பெரியார் திடலில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், சனாதனம் அழிக்கப்பட, ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று என்றார். இது அவருடை சொந்த கருத்தல்ல. தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் பேசிய கருத்து. கழகத்தின் கருத்து. அதைத்தான் உதயநிதிஸ்டாலின் பேசினார்.

உதயநிதிஸ்டாலின் இந்துக்களை ஒழிக்க வேண்டும், கடவுளை ஒழிக்க வேண்டும் என்று பேசினார் என்று எதிர்க்கட்சியினர் திரித்து பேசுகிறார்கள்.

திராவிடத்தையும் ஆன்மி கத்தையும் பிரிக்கமுடியாது. இங்கே இருக்கிற நமது எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிகளில் எத்தனை கோவில்களுக்கு கும்பாபிஷேக பணிகள், தேர் செய்யும் பணிகள், கோவில் கட்டும் பணிகள் என பல பணிகளை செய்து வருகிறார்கள்.

தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிற நமது திராவிட மாடல் அரசு கடந்த 2 ஆண்டுகளில், 1000 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தி இருக்கிறது. நாங்கள் ஆன்மிகத்திற்கு எதிரியா?.

அய்யங்குளம் தூர்வாரும் பணி

திருவண்ணாமலை அய்யங்குளம், நாயக்கர் காலத்தில் அமைக்கப்பட்டது. தூய்மை அருணை சார்பில் திருவண்ணாமலையில் இதுவரை நடைபெற்று வருகிற பணிகள் எத்தகையது என்பது உங்களுக்கு தெரியும். இந்து அறநிலையத்துறையின் அனுமதி பெற்று அய்யங்குளம் தூர்வாரப்படுகிறது.

இதை எல்லாம் நீங்கள் மக்களிடத்தில் எடுத்து சொல்ல வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தல்களில் 40 தொகுதிகளிலும் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.

விவசாய அணி சார்பாக கலெக்டர் நடத்தும் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும்.

கட்டணமில்லா பஸ் பயணம், கலைஞர் மகளிர் உரிமை தொகை மாதம் ரூ.1000, கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குகிற புதுமைப்பெண் திட்டம், பள்ளிக்குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் உள்ளிட்ட அரசின் சாதனைகளை மகளிர் அணியும், மகளிர் தொண்டரணியும் மக்களிடத்திலே சென்று பிரசாரம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அணியும் தங்கள் தனித்தன்மையை வெளிப்படுத்த வேண்டும்

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மருத்துவரணி துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர் பிரியாவிஜயரங்கன், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட விவசாயி அமைப்பாளர் ஜெ.மெய்கண்டன், மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் பிரவீன் ஸ்ரீதரன் மற்றும் அனைத்து அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், மாவட்ட தலைவர்கள், மாவட்ட துணைத்தலைவர்கள், மாவட்ட துணை அமைப்பாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story