டி.ஆர்.பி.ராஜா இன்று அமைச்சராக பதவியேற்கிறார்..!


டி.ஆர்.பி.ராஜா இன்று அமைச்சராக பதவியேற்கிறார்..!
x

மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா இன்று அமைச்சராக பதவியேற்கிறார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்று 2 ஆண்டுகளை நிறைவு செய்து, 3-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் தமிழக அமைச்சரவையில் 3 மாற்றங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்துள்ளார்.

அதன்படி, பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் மீது அரசியல் ரீதியாக பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், அமைச்சரவையில் புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா சேர்க்கப்பட்டுள்ளார். அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.ஆர்.பி. ராஜா தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகன் மற்றும் மன்னார்குடி எம்.எல்.ஏ ஆவார்.

இந்த நிலையில், டி.ஆர்.பி. ராஜா இன்று (11-ந்தேதி) காலை 10.30 மணிக்கு கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இருக்கும் தர்பார் அரங்கில் அமைச்சராக பதவி ஏற்றுக்கொள்கிறார். டி.ஆர்.பி.ராஜாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். டி.ஆர்.பி.ராஜா பதவி ஏற்றப்பிறகு அவருக்கான இலாகா தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும். அப்போது, அவருக்கான இலாகா என்ன? என்பது தெரியவரும். பதவியேற்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

1 More update

Next Story