100 அரங்குகளுடன் சர்வதேச பின்னலாடை கண்காட்சி தொடங்கியது
வெளிநாட்டு வர்த்தகர்களை ஈர்க்கும் வகையில் திருப்பூர் அருகே 100 அரங்குகளுடன் சர்வதேச பின்னலாடை கண்காட்சி நேற்று தொடங்கியது. செயற்கை நூலிழை ஆடைகள் கண்காட்சி அரங்கில் அதிகம் இடம்பெற்றன.
வெளிநாட்டு வர்த்தகர்களை ஈர்க்கும் வகையில் திருப்பூர் அருகே 100 அரங்குகளுடன் சர்வதேச பின்னலாடை கண்காட்சி நேற்று தொடங்கியது. செயற்கை நூலிழை ஆடைகள் கண்காட்சி அரங்கில் அதிகம் இடம்பெற்றன.
சர்வதேச பின்னலாடை கண்காட்சி
இந்தியா நிட்பேர் அசோசியேசன் (ஐ.கே.எப்.ஏ.) சார்பில் பொன்விழா சர்வதேச பின்னலாடை கண்காட்சி நேற்று காலை திருப்பூர் அருகே பழங்கரையில் உள்ள ஐ.கே.எப். வளாகத்தில் தொடங்கியது.
ஐ.கே.எப்.ஏ.வுடன் திருப்பூர் ஏற்றுதியாளர்கள் சங்கம், ஏ.இ.பி.சி., அபார்ட், கரூர் ஆடை உற்பத்தியாளர்கள் சங்கம், சென்னை அப்பேரல் சங்கம், பிராண்டட் சோர்சிங் லீடர்ஸ் (பி.எஸ்.எல்.) நிப்ட் ஏ, பையிங் ஏஜெண்ட் அசோசியேசன் ஆகியவை சேர்ந்து கண்காட்சியை நடத்துகிறது.
கண்காட்சியை இங்கிலாந்து நிறுவனமான எத்திக்கல் டிரேடிங் இனிசியேட்டிவ் நிர்வாக இயக்குனர் பீட்டர் மெக்அலிஸ்டர் ரிப்பன் வெட்டி தொடங்கிவைத்தார். இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு (பியோ) தலைவரும், ஐ.கே.எப்.ஏ. தலைவருமான சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் திருக்குமரன், பையிங் ஏஜெண்ட் சங்க தலைவர் இளங்கோவன், பி.எஸ்.எல். தலைவர் சுவாமிநாதன் ராமச்சந்திரன், சோர்சிங் கன்சல்டட் சங்க தலைவர் விஷால் திங்ரா, நிப்ட் ஏ சங்க தலைவர் ஆனந்த் ஜெயின், ஐ.கே.எப். நிர்வாகி ரோகிணி, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க துணை தலைவர் ராஜ்குமார் துரைசாமி, இணை செயலாளர் குமார், பொருளாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
100 அரங்குகள்
தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் 14 ஆயிரம் சதுர அடியில் 82 ஏற்றுமதியாளர்கள், 18 மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனையாளர்கள் என 100 அரங்குகள் இடம்பெற்றுள்ளன. செயற்கை நூலிழை ஆடைகள், பாலியெஸ்டர் ஆடைகள், விளையாட்டு உபகரண ஆடைகள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் தயாரிக்கும் ஆடைகள், கழிவுதுணி, கழிவு பிளாஸ்டிக் பாட்டில்களில் நூலிழையில் தயாரித்த ஆடைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கண்காட்சி அரங்குகளில் ஆடைகள் இடம்பெற்று இருந்தன. அதாவது கழிவுபொருட்களை மறுசுழற்சி செய்து ஆடை தயாரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருந்தது.
ஆடை அலங்கார அணிவகுப்பு
கண்காட்சியில் நேற்று மாலை ஆடை அலங்கார அணிவகுப்பு நடந்தது. ஆண், பெண் மாடல்கள் புதுமையான ஆடை ரகங்களை அணிந்து ஒய்யாரமாக நடந்து வந்தனர். வெளிநாட்டு வர்த்தகர்கள், மதிப்பு கூட்டப்பட்ட புதிய பேஷன் ஆடை ரகங்களை மிக எளிதாக அறிந்துகொள்ளும் வகையில் ஆடை அலங்கார அணிவகுப்பு நடைபெற்றது.