பெண் வேடம் அணிந்து வந்து மூதாட்டியிடம் நகை பறிக்க முயற்சி
அன்னதானப்பட்டியில் பெண் வேடம் அணிந்து வந்து மூதாட்டியிடம் நகை பறிக்க முயற்சி நடந்துள்ளது. அந்த நபரை கட்டிப்பிடித்துக் கொண்டு மூதாட்டி கூச்சலிட்டதால் வாலிபர் தப்பி ஓட்டம் பிடித்தார்.
அன்னதானப்பட்டி:-
அன்னதானப்பட்டியில் பெண் வேடம் அணிந்து வந்து மூதாட்டியிடம் நகை பறிக்க முயற்சி நடந்துள்ளது. அந்த நபரை கட்டிப்பிடித்துக் கொண்டு மூதாட்டி கூச்சலிட்டதால் வாலிபர் தப்பி ஓட்டம் பிடித்தார்.
மூதாட்டி
சேலம் அன்னதானப்பட்டி அகத்தியர் தெருவை சேர்ந்தவர் அலமேலு (வயது 70). நேற்று முன்தினம் காலை அவரது குடும்பத்தினர் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்று விட்டனர். வீட்டில் தனியாக இருந்த அலமேலு, தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்.
மதியம் 3.15 மணியளவில் நைட்டி அணிந்து கொண்டு ஒருவர் அலமேலு வீட்டுக்கதவை தட்டினார். அலமேலுவோ யாரா வந்துள்ளார்கள் என நினைத்து கதவை திறந்தார். அந்த நபரோ, குடிக்க தண்ணீர் வேண்டும் என கேட்டு மூதாட்டியின் கவனத்தை திசை திருப்ப முயன்றதுடன், அலமேலு கழுத்தில் அணிந்து இருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார்.
தப்பி ஓட்டம்
உடனே சுதாரித்துக் கொண்ட அலமேலு அந்த நபரை கட்டிப்பிடித்துக் கொண்டு திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் அந்த நபர் மூதாட்டியை தள்ளி விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். அவர் ஓட்டம் பிடித்த போதுதான், நைட்டி அணிந்து வந்தது 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் நைட்டி அணிந்து மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.