ரூ.36 லட்சத்தில் தூர்வாரும் பணிகள்


ரூ.36 லட்சத்தில் தூர்வாரும் பணிகள்
x

வடகிழக்கு பருவமழையை கருத்தில் கொண்டு ரூ.36 லட்சத்தில் தூர்வாரும் பணிகள் நடைபெற உள்ளதாக நாகை நகர் மன்ற தலைவர் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

வடகிழக்கு பருவமழையை கருத்தில் கொண்டு ரூ.36 லட்சத்தில் தூர்வாரும் பணிகள் நடைபெற உள்ளதாக நாகை நகர் மன்ற தலைவர் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

நகர் மன்ற கூட்டம்

நாகை நகராட்சியின் மாதாந்திர கூட்டம் நகர்மன்ற அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு நகர் மன்ற தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் பேசியதாவது:

ஜோதிலட்சுமிகுணாநிதி(இ.கம்யூ):-நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆடு, மாடுகள் சாலைகளில் சுற்றித்திரிவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே ஆடு, மாடுகளை பிடித்து பட்டியில் அடைக்க வேண்டும்.

ரேஷன் கடை

முகமதுநத்தர்(காங்): 26-வது வார்டில் நாகநாதர் சன்னதி, நீலாதாட்சியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதியில் 2 ரேஷன் கடைகள் உள்ளன. பொதுமக்கள் அதிக வசிக்கும் பகுதியாக இருப்பதை கருத்தில் கொண்டு, கல்லுக்காரத்தெரு பகுதியில் ரேஷன் கடை அமைக்க வேண்டும்.

மணிகண்டன்(அ.தி.மு.க.): அரசின் ஒருங்கிணைந்த சமையல் கூடம் வண்டிப்பேட்டையில் இயங்கி வந்தது. தற்போது அரசு ஆஸ்பத்திரி பின்புறம் உள்ள இடத்தில் ரூ.23 லட்சம் மதிப்பில் கட்டிடம் கட்டப்பட உள்ளது. இப்பகுதியில் நாய்க்கு அறுவை சிகிச்சை செய்யும் மையம் உள்ளது. மேலும் இந்த இடம் கோவிலுக்கு சொந்தமானதாக உள்ளது. சுகாதாரமற்ற முறையில் உள்ள இப்பகுதியில் சமையல் கூடம் கட்டக்கூடாது. மாற்று இடத்தை தேர்வு செய்து புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.

குடிநீரில் கலக்கும் கழிவுநீர்

சுந்தரேஸ்வரி(தி.மு.க.):- பெருமாள் கோவில் மேலவடம் போக்கி தெருவில் குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்து வருவதை 2 முறை சரிசெய்தும், தொடர்ந்து கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே நிரந்தரமாக அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜாகீர்உசேன்(தி.மு.க.):- செம்மரைக்கடை வடக்குச் சந்து, தென்சந்து, மேல்சந்து, கீழ்சந்து ஆகிய பகுதிகளுக்கு மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும். சாலையை சரி செய்ய வேண்டும்.

ரூ.36 லட்சத்தில் தூர்வாரும் பணி

மாரிமுத்து (தலைவர்): வடகிழக்கு பருவமழையை கருத்தில் கொண்டு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக நகராட்சியின் எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.36 லட்சத்தில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

அண்ணாதுரை(தி.மு.க.):- கீரைக்கொல்லை தெரு சி.எஸ்.ஐ மேல்நிலைப்பள்ளியில் இருந்து ரெயில்வே கேட் வரை அமைந்துள்ள தார்சாலையை சரிசெய்ய வேண்டும். மேலும் சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர். இதில் துணைத்தலைவர் செந்தில்குமார், ஆணையர் ஸ்ரீதேவி, பொறியாளர் ஜெயகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story