தூர்வாரும் பணிகளை உடனே தொடங்க வேண்டும்
தூர்வாரும் பணிகளை உடனே தொடங்க வேண்டும்
தஞ்சை மாவட்டத்தில் நடப்பாண்டு தூர்வாரும் பணிகளை உடனே தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தினர்.
குறைதீர்க்கும் கூட்டம்
தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், தஞ்சை மாவட்டத்தில் கோடை பருவத்தில் 6,608 எக்டேரில் சாகுபடிசெய்யப்பட்டுள்ளது. குறுகிய கால நெல் விதைகள் அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருகிறது. உளுந்து விதைகள், உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் 3,156 பயிர் அறுவடை பரிசோதனை தளைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு 3,025 தளைகளில் அறுவடை முடிந்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட 45 கிராமங்களில் 90 இடங்களில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது"என்றார்.
கரும்பு ஊக்கத்தொகை
கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு பேசினர். அதன் விவரம் வருமாறு:-
பொன்னவராயன்கோட்டை விவசாயி வீரசேனன்:- தமிழக அரசே தேங்காய்களை கொள்முதல் செய்து, நியாய விலை கடைகள் மூலம் விலையில்லாமல் வழங்க வேண்டும்.
கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ்: கரும்புக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூ.195 வீதம் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டபடி, உடனடியாக அரசாணை வெளியிட்டு, விவசாயிகளுக்கு விரைவில் பணம் கிடைக்கச்செய்ய வேண்டும்.
விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கண்ணன்:- தஞ்சை மாவட்டத்தில் பல வாய்க்கால்கள் சேதமடைந்த நிலையில் உள்ளதால், தூர்வாரும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும்.
அச்சுவெல்லம்
அய்யம்பேட்டை முஹம்மது இப்ராஹிம்:- வீரமாங்குடியில் தயார் செய்யப்படும் அச்சு வெல்லத்தை தமிழக அரசே கொள்முதல் செய்து, நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ரவிச்சந்தர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் தூர் வாரும் பணி மேற்கொள்வது தொடர்பாக விவசாயிகள் பங்கேற்கும் கலந்தாய்வுக்கூட்டத்தை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.