ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு; மத்திய மந்திரி தலைமையில் ஆய்வுக்கூட்டம்


ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு; மத்திய மந்திரி தலைமையில் ஆய்வுக்கூட்டம்
x

ஜல்ஜீவன் திட்டத்தின் வீடுதோறும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருவது குறித்த ஆய்வுக்கூட்டம் மத்திய மந்திரி தலைமையில் நடந்தது.

சென்னை

மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் வீடுதோறும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருவது குறித்த ஆய்வுக்கூட்டம் மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திரசிங் செகாவத் தலைமையில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் முன்னிலையில் சென்னையில் நேற்று நடைபெற்றது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 1 கோடியே 24 லட்சத்து 94 ஆயிரம் வீடுகளில் 69 லட்சத்து 50 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இது 55.63 சதவீதம் ஆகும். தேசிய சராசரியான 53.96 சதவீதத்தை விட இது அதிகம். 2022-23-ம் ஆண்டுக்கான இலக்கு 28 லட்சத்து 48 ஆயிரம் ஆகும். இதில், 16 லட்சத்து 51 ஆயிரம் குடிநீர் குழாய் இணைப்புகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளது என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுதல், உபரிநீர் மூலம் அருகில் உள்ள நீர்நிலைகளை நிரப்பி நிலத்தடி நீராதாரத்தை பெருக்குதல் போன்ற சிறப்பு திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் மத்திய அரசின் குடிநீர் வழங்கல் மற்றும் தூய்மை திட்டத்துறை செயலாளர் வினி மஹாஜன், தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மைச் செயலாளர் பி.அமுதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story