சாலையில் ஆறாக ஓடிய குடிநீர்
சாலையில் ஆறாக ஓடிய குடிநீர்
கிணத்துக்கடவு
குறிச்சி-குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்ட தரைமட்ட தொட்டி, கிணத்துக்கடவு பெரியார் நகரில் உள்ளது. இங்கு ஆத்துப்பொள்ளாச்சியில் இருந்து கொண்டு வரப்படும் தண்ணீர் சேகரிக்கப்பட்டு, வீடுகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் கிணத்துக்கடவு பகுதியில் திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால் வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்வது பாதிக்கப்பட்டது. ஆனால் ஆத்து பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவில் உள்ள தொட்டிக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டு இருந்ததால் நிரம்பி வழிந்தது. இதனால் சர்வீஸ் சாலையில் தண்ணீர் ஆறாக ஓடியது. இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, மின்தடை ஏற்படும் நேரங்களில் தொட்டி நிறைந்து தண்ணீர் வீணாக வெளியேறுவது தொடர்கிறது. இதை அதிகாரிகள் தடுக்க வேண்டும் என்றனர்.