கோடைகால குடிநீர் பிரச்சினையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை


கோடைகால குடிநீர் பிரச்சினையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை
x
தினத்தந்தி 13 April 2023 6:45 PM GMT (Updated: 13 April 2023 6:47 PM GMT)

கோடைகால குடிநீர் பிரச்சினையை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்

கோடைகால குடிநீர் பிரச்சினையை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

குடிநீர் பிரச்சினை

விருதுநகர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 5 நகராட்சிகள், 9 பேரூராட்சிகள், 11 யூனியன் அடங்கிய 450 கிராம பஞ்சாயத்துக்களில் 1800 கிராமங்கள் உள்ளன. இந்த உள்ளாட்சி அமைப்புகள் யாவும் தங்கள் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பிரதானமாக நிலத்தடி நீர் ஆதாரத்தை கொண்டும், தாமிரபரணி கூட்டுக் குழு திட்டத்தின் மூலம் கிடைக்கும் தாமிரபரணி தண்ணீரை கொண்டும் குடிநீர் தேவையை ஓரளவு சமாளித்து வருகின்றன. ஆனாலும் அனைத்து பகுதிகளிலும் 10 முதல் 15 நாட்கள் இடைவெளியில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வரும் நிலை உள்ளது.

இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் நீராதாரங்களில் இருந்து தேவைப்படும் அளவிற்கு குடிநீர் கிடைக்காததே பிரதான காரணமாகும். இந்நிலையில் வழக்கமாக மாவட்டத்தில் கோடை காலத்தில் ஏற்கனவே உதவிகரமாக இருந்து வரும் நீராதாரங்கள் வறண்டு விடும் நிலையில் குடிநீர் பிரச்சினை கடுமையாகும்.

முன்னெச்சரிக்கை

இதன் காரணமாக நகர்ப்புறங்களில் குடிநீர் இடைவெளி நாட்கள் அதிகரிப்பதும், கிராமப்புறங்களில் மக்கள் குடிநீரை தேடி நீண்ட தூரம் சென்று குடிநீர் எடுக்க வேண்டிய நிலையும் ஏற்படும். கோடைகால குடிநீர் பிரச்சினையை சமாளிக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எனவே மாவட்ட நிர்வாகம் உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகளுடன் கலந்தாய்வு மேற்கொண்டு அவர்களுக்கு குடிநீர் பிரச்சினயை சமாளிக்க தேவைப்படும் நிதியினை கணக்கிட்டு அரசிடம் இருந்து உரிய நிதி ஒதுக்கீடு பெற்று லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யவும், கிராமப்புறங்களில் நீராதாரமாக விளங்கும் ஆழ்துளை கிணறுகளை தூர்வாரவும், புதிதாக ஆழ்துளை கிணறுகள் தோண்டவும், பஞ்சாயத்து நிர்வாகங்களுக்கு மின்மோட்டார் பழுது, குழாய் உடைப்பு போன்ற பிரச்சினைகளை சீரமைக்க நிதி உதவி செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமே கோடைகால குடிநீர் பிரச்சினையை ஓரளவு சமாளிக்க வாய்ப்பு ஏற்படும்.


Next Story