குடிக்க கூட தண்ணீரில்லாத திருப்பூர் ரெயில் நிலையம்
குடிக்க கூட தண்ணீரில்லாத திருப்பூர் ரெயில் நிலையம்
திருப்பூர்
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறையாக ரெயில் போக்குவரத்துத்துறை செயல்பட்டு வருகிறது. மற்ற போக்குவரத்தை போன்று அல்லாமல் ரெயில் போக்குவரத்துக்கு என்று தனிச்சிறப்பு உண்டு. சவுகரியமாக, குறைந்த கட்டணத்தில் பயணிக்க விரும்பும் அனைவரின் தேர்வாக ரெயில்வே போக்குவரத்து இருக்கிறது. ஆனால் இந்த ரெயில் பயணத்தை மேற்கொள்ள ரெயில் நிலையம் செல்லும் பொதுமக்கள் அடிப்படை வசதிகள் இன்றி சிரமப்படுகின்றனர்.
இந்தநிலையில் பின்னலாடை நகரமாக விளங்கும் திருப்பூர் மாநகரத்தில் உள்ளூர், வெளியூர் மாவட்ட மக்கள் மட்டுமின்றி வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களும் வேலைநிமித்தமாக வசித்து வருவதால் அதிகமான பொதுமக்கள் இங்கே இருக்கின்றனர். இவர்கள் வேலைக்காக வேறு இடத்திற்கு செல்லவும், சொந்த ஊருக்கு செல்லவும் அதிகமாக ரெயில் போக்குவரத்தையே பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த ரெயில் பயணம் மேற்கொள்ள ரெயில் நிலையம் செல்லும் பயணிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகின்றனர். குறிப்பாக குடிதண்ணீர், கழிப்பிடம் மற்றும் குப்பைத்தொட்டி பற்றாக்குறையால் பொதுமக்கள் ரெயில் நிலையத்திற்குள் தவிக்கின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை கூறியதாவது:-
கழிப்பிட வசதி
உமர் பாருக் (திருப்பூர்) :-
திருப்பூர் ரெயில் நிலையத்தில் 2 நடைமேடைகள் உள்ளன. அனால் சுகாதார வளாக வசதி போதுமானதாக இல்லை. கூடுதலாக சுகாதார வளாகம் ஏற்படுத்தினால் நன்றாக இருக்கும். அதேபோல் ரெயில் நிலையத்திற்குள் இருக்கிற மின்தூக்கி சரிவர செயல்படுவதில்லை. அடிக்கடி பழுது ஏற்படுகிறது. இதனால் வயதானவர்கள் மிகவும் சிரமம் அடைக்கின்றனர். மேலும் எஸ்கலேட்டர் இன்னும் பயன்பாட்டிற்கு வரமால் இருக்கிறது. எனவே பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
செல்வராஜ் (செட்டிபாளையம்):-
நான் திருப்பூரில் செட்டிபாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். ஜோலார்பேட்டைக்கு குடும்பத்துடன் செல்வதற்காக மதியம் 1 மணிக்கு ஜோலார்பேட்டை செல்லும் ரெயிலுக்கு டிக்கெட் எடுத்தேன். ஆனால் ரெயிலில் அதிகமான பயணிகள் கூட்டம் இருந்ததால் குடும்பத்துடன் ஏற முடியாமல் அடுத்த ரெயிலுக்காக மாலை 4 மணிவரை காத்திருக்கிறேன். எனவே இதுபோன்ற பிரச்சினைக்கு தீர்வு கானும் வகையில் ரெயிலில் கூடுதலாக ஒரு பொதுபெட்டியை இணைத்தால் நன்றாக இருக்கும்.
மேலும் நடைமேடை 2-ல் டிக்கெட் பதிவு செய்வதற்கு 2 டிக்கெட் கவுண்ட்டர்கள் இருந்தது. ஆனால் தற்போது ஒரு டிக்கெட் கவுண்ட்டர் மட்டுமே செயல்பாட்டில் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் டிக்கெட் எடுப்பதற்கு அதிகம் நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே பயன்படாமல் இருக்கும் டிக்கெட் கவுண்ட்டரை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூடுதல் ரெயில் வேண்டும்
சுதா (பெருமாநல்லூர்):-
ரெயில் நிலையத்திற்குள் வரும் தண்ணீர் குடிப்பதற்கு தகுந்ததாக இல்லை. எனவே குடிப்பதற்கு நல்ல தண்ணீர் கிடைப்பதற்கு வழிவகை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பெரும்பாலான ரெயில்களில் பொதுபெட்டி ஒன்றே ஒன்றுதான் உள்ளது. இதனால் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகின்றது. குழந்தைகளுடன் ரெயிலில் நின்று செல்லும் அவலநிலை ஏற்படுகிறது. எனவே கூடுதலாக பொதுபெட்டியை இணைத்தால் பயனுள்ளதாக இருக்கும். மேலும் ரெயிலில் பெண்களுக்கான பெட்டி சிறியதாக இருக்கிறது. கூடுதல் பெட்டி இணைத்தால் பெண்களுக்கு பாதுகாப்பாக, வசதியாக இருக்கும்.
அதேபோல் ரெயிலில் இருந்து இறங்கி நடைமேடை வழியாக வெளியே செல்வதற்கு ரொம்ப நேரம் எடுக்கிறது. குறிப்பாக பைகளுடன் சிறிது தூரம் சென்று பின்பு பாலத்தின் மீது ஏறி இறங்கி செல்ல வேண்டி இருக்கிறது. கிட்டத்தட்ட வெளியே செல்வதற்கே ½ மணிநேரம் எடுக்கிறது. படிக்கட்டுகளும் அதிகமாக உள்ளதால் வயதானவர்கள் செல்ல மிகவும் கஷ்டப்படுகின்றனர். எனவே இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனோஜ் (அங்கேரிபாளையம்):-
நான் பீகார் மாநிலம் செல்வதற்காக ரெயில் நிலையத்தில் காத்திருக்கிறேன். ரெயிலில் எப்போதும் கூட்டம் அதிகளவில் இருக்கும். குறிப்பாக பண்டிகை காலங்களில் அதிகமான கூட்டம் இருப்பதால் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்வதற்கு சிரமமாக உள்ளது. எனவே பண்டிகை காலங்களில் கூடுதல் ரெயில் இயக்கினால் நன்றாக இருக்கும்.
பேட்டரி வாகனம் சேவை
தனம் (பெருமாநல்லூர்):-
நான் மாதம் 2 முறை சொந்த காரணங்களுக்காக தஞ்சாவூர் செல்கிறேன். அப்போது பெட்டிகளையும், பைகளையும் நடைமேடைக்கு கொண்டு செல்ல சிரமமாக இருக்கிறது. குறிப்பாக வயதானவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பெட்டிகளை தூக்கி செல்ல பேட்டரி வாகனங்களை ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும்.
அதேசமயம் ரெயில் நிலையத்தில் முன்பதிவு செய்வதற்காக பெரும்பாலான மக்கள் வருகின்றனர். ஆனால் முன்பதிவு செய்வதற்கான படிவத்தை நிரப்ப தெரியாமல் தவிக்கின்றனர். குறிப்பாக அவர்களுக்கு தாங்கள் செல்லும் ரெயில் வண்டி எண் தெரிவதில் அதனை அதிகாரிகளிடம் சென்று கேட்டால் டிஜிட்டல் தகவல் பலகையை பார்த்து எழுதும்படி கூறுகின்றனர். ஆனால் அதனை பார்த்து எழுத தெரியாமல் படிக்காத நபர்களும் சில சமயங்களில் படித்தவர்களுமே கஷ்டப்படுகின்றனர். இதற்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொண்டால் நன்றாக இருக்கும்.
இவ்வாறு பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.
திருப்பூரில் ரெயில் நிலையம் உள்ளே சுத்தமாக வைத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுக்குரியது. ஆனால் ரெயில் நிலையத்திற்குள் குப்பைத்தொட்டி பற்றாக்குறையாக உள்ளது. எனேவ கூடுதல் குப்பைத்தொட்டிகளை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ரெயில் நிலையம் நுழைவு பகுதியில் ஆங்காங்கே தெருநாய்கள் படுத்து கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில் தெருநாய்களை பிடித்து கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் நடைமேடை 1-ல் இருக்கும் ஆவின் பாலகம் பூட்டி கிடக்கிறது. இதன்காரணமாக நடைமேடை 1-ல் இருக்கும் பயணிகள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு தூரத்தில் உள்ள கடைக்கு செல்ல வேண்டி இருக்கிறது. இந்த கடையை திறக்க நடவடிக்கை மேற்கொண்டால் பயனுள்ளதாக இருக்கும். நடைமேடை 2-ல் இருக்கும் சுகாதார வளாகம் பூட்டி கிடக்கிறது. எனவே அந்த சுகாதார வளாகத்தை திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாகும்.