4 மண்டலங்களிலும் குடிநீர் சீராக வழங்க வேண்டும்; மேயரிடம் கோரிக்கை
பணியிட மாற்றம் செய்யப்பட்ட வால்வு ஆபரேட்டர்களை மீண்டும் அதே இடத்தில் நியமித்து 4 மண்டலங்களிலும் குடிநீர் சீராக வழங்க வேண்டும் என மேயரிடம், அரசு ஊழியர்கள் ஐக்கிய பேரவையினர் கோரிக்கை மனு கொடுத்தனர்.
நெல்லை:
பணியிட மாற்றம் செய்யப்பட்ட வால்வு ஆபரேட்டர்களை மீண்டும் அதே இடத்தில் நியமித்து 4 மண்டலங்களிலும் குடிநீர் சீராக வழங்க வேண்டும் என மேயரிடம், அரசு ஊழியர்கள் ஐக்கிய பேரவையினர் கோரிக்கை மனு கொடுத்தனர்.
குறை தீர்க்கும் கூட்டம்
நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மேயர் பி.எம்.சரவணன் பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, அவற்றுக்கு தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதில் மாநகர நல அலுவலர் ராஜேந்திரன், செயற்பொறியாளர் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நெல்லை மாநகராட்சி அரசு ஊழியர்கள் ஐக்கிய பேரவை தலைவர் மாரியப்பன் தலைமையில் பணியாளர்கள் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், 'நெல்லை மாநகராட்சி 4 மண்டலங்களிலும் வால்வு ஆபரேட்டர்களாக பணியாற்றி வருகிறோம். 42 வால்வு ஆபரேட்டர்கள் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்த ஆபரேட்டர்களை மீண்டும் அதே இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்து குடிநீர் வினியோகம் சீராக நடக்க உத்தரவிட வேண்டும்'' என்று கூறிஇருந்தனர்.
குப்பைகளை அப்புறப்படுத்த...
மஸ்ஜீத் மாலிக் அமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், ''பாளையங்கோட்டை கோட்டூர் வார்டு எண் 8-ல் பஜனை மடம் பகுதியில் பாளையங்கால்வாய் அருகே குப்பைகள் கொட்டப்பட்டு எரிக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சி அளிக்கிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல், ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டு உள்ளன. எனவே அப்பகுதியில் தூய்மை பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறி இருந்தனர். இதே போல் பல்வேறு தரப்பினர் மேயரிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
கவுன்சிலர் கந்தன் கொடுத்த மனுவில், ''வண்ணார்பேட்டையில் ஜவுளிக்கடை முன்பும், பெட்ரோல் பங்க் எதிரேவும் ஏற்கனவே செயல்பட்டு வந்த பஸ் நிறுத்தங்களை மீண்டும் செயல்படுத்த வேண்டும்'' என்று கூறிஇருந்தார்.
படித்துறைகள்
நெல்லை மாவட்ட சலவை தொழிலாளர்கள் சார்பில் கொடுத்த மனுவில், ''கருப்பந்துறையில் தாமிரபரணி ஆற்றில் அமைந்துள்ள 2-வது மற்றும் 3-வது தளத்தில் அமைந்துள்ள படிக்கட்டுகளை சீரமைத்து தர வேண்டும்'' என கேட்டிருந்தனர்.
இதேபோல் மாற்றுத்திறனாளி ஒருவர், தனக்கு மாநகர எல்லையில் ஆவின் பாலகம் அமைக்க அனுமதிக்க வலியுறுத்தி மனு கொடுத்தார்.
கூட்டத்தில் மண்டல உதவி ஆணையாளர்கள் லெனின், அய்யப்பன், ஜஹாங்கீர் பாட்ஷா, பைஜூ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.