மஞ்சள் நிறத்தில் குடிநீர் வினியோகம்
பொள்ளாச்சியில் மஞ்சள் நிறத்தில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் மஞ்சள் நிறத்தில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மஞ்சள் நிறத்தில்...
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளுக்கும் அம்பராம்பாளையம் ஆழியாறு மூலம் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. ஆற்றில் இருந்து நீரை எடுத்து சுத்திகரித்து, பிரதான குழாய்கள் மூலம் மார்க்கெட் ரோடு நீரேற்று நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் கோட்டூர் ரோடு கலைவாணர் வீதிக்கு நேற்று குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அப்போது குழாயில் இருந்து மஞ்சள் நிறத்தில் குடிநீர் வருவதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் குடிநீரும் சுவை இல்லாமல் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
தொண்டை வலி
நகராட்சி மூலம் வினியோகம் செய்யப்படும் குடிநீர் மஞ்சள் நிறத்தில் வருகிறது. இந்த நீரை குடிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் குடிநீர் சரிவர வருவதில்லை. சில நேரங்களில் தண்ணீர் மஞ்சள், சிவப்பு நிறத்தில் வருவதால் பயன்படுத்த முடியவில்லை. மேலும் குடிநீரின் சுவையும் மாறி உள்ளது.
இந்த நீரை குடிப்பதால் காய்ச்சல், தொண்டை வலி போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே நகராட்சி அதிகாரிகள் குடிநீரை உரிய ஆய்வு செய்ய வேண்டும். மேலும் சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
ஆய்வு
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆற்று நீர் கலங்கலாக மாறி வருகிறது. இதற்கிடையில் கலைவாணர் வீதியில் மஞ்சள் நிறத்தில் குடிநீர் வருவது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும் என்றனர்.