நர்சிங் மாணவியை திருமணம் செய்த டிரைவர் போக்சோவில் கைது


நர்சிங் மாணவியை திருமணம் செய்த டிரைவர் போக்சோவில் கைது
x

நர்சிங் மாணவியை திருமணம் செய்த டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயதுடைய டிப்ளமோ நர்சிங் முதலாமாண்டு படித்து வரும் மாணவி கடந்த ஆகஸ்டு மாதம் 9-ந்தேதி தனது சித்தி வீட்டிற்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றவர் பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கும் தேடியும் அவர் கிடைக்காதால் இதுகுறித்து மாணவியின் தாய் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர். மேலும் மாணவியை அம்மாபாளையம் அருந்ததியர் தெருவை சேர்ந்த சிவராமன் மகன் டிரைவர் விஜய் என்ற விஜயகுமார் (26) என்பவர் அழைத்து சென்றிருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக மாணவியின் தாய் ஏற்கனவே போலீசாரிடம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் மாணவியை அழைத்து சென்று விஜயகுமார் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தது போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் விஜயகுமாரையும், அந்த மாணவியை நேற்று பெரம்பலூருக்கு அழைத்து வந்தனர். பின்னர் அந்த மாணவியை அவரது தாயிடம் ஒப்படைத்தனர். மாணவி மாயமான வழக்கை மாற்றி விஜயகுமார் மீது குழந்தை திருமணம், போக்சோ உள்ளிட்ட சட்டங்களின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர். மாவட்டத்தில் குழந்தை திருமணம் பற்றி அறிந்தால் சைல்டு லைனை 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தகவல் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும். இதேபோல் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடந்தால் 181 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story