கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை விடுமுறையில் நீர்நிலைகளில் மாணவர்கள் பலியாகும் சம்பவங்கள் அதிகரிப்புவிழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா? பொதுமக்கள் கருத்து


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை விடுமுறையில் நீர்நிலைகளில் மாணவர்கள் பலியாகும் சம்பவங்கள் அதிகரிப்புவிழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா? பொதுமக்கள் கருத்து
x
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை விடுமுறையில் பாதுகாப்பற்ற நீர்நிலைகளில் மாணவர்கள் மூழ்கி இறக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

கோடை விடுமுறை

பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் தங்களின் விடுமுறை நாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்கள். பள்ளி விடுமுறை நாட்களில் குழந்தைகளை பராமரிப்பது பெற்றோருக்கு பெரும் வேலை தான். விடுமுறை நாட்களில் அவர்களை கண்ணின் இமைபோல் பாதுகாக்க வேண்டியது பெற்றோரின் கடமையாகவும், கட்டாயமாகவும் உள்ளது. வெளியே விளையாட சென்ற குழந்தைகள் காயத்துடன் வீடுகளுக்கு வருவதும், நண்பர்களுக்குள், தோழிகளுக்குள் சண்டை போட்டுக் கொள்வதும் ஒருபுறமிருக்க, சில நேரங்களில் அசம்பாவித சம்பவங்களும் நடந்து விடுகின்றன. பாதுகாப்பற்ற நீர்நிலைகள் என்று தெரிந்தும் குழந்தைகள் அதில் மூழ்கி தங்களின் இன்னுயிரை தொலைத்து விடுவது வேதனையின் உச்சமாக உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் மாணவர்கள் மூழ்கி பலியாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ஆண்டுக்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் ஏரி, குளம், குட்டை, கிணற்றில் விழுந்து இறப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்திய தண்டனை சட்டம் பிரிவு 174-ல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் ஆண்டுதோறும் பதிவாகின்றன. இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் பலியான 100 பேரில் 50 பேர் பள்ளி மாணவ, மாணவிகள் ஆவர்.

இதுகுறித்து டாக்டர்கள், சமூக ஆர்வலர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

கூடுதல் பொறுப்பு

கிருஷ்ணகிரியை சேர்ந்த டாக்டர் கார்த்திக்:-

குழந்தைகள் வளர்ப்பு விஷயத்தில் ஒவ்வொரு பெற்றோருக்கும் கூடுதல் பொறுப்புகள் உள்ளன. குழந்தைகளை நாம் மிகவும் கவனமாக கண்காணிக்க வேண்டும். நீர்நிலைகளில் மூழ்கி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தான் அதிகளவில் இறப்பதாக கூறுகிறார்கள். இதுவும் ஒரு வகை கவனக்குறைவே ஆகும். குழந்தைகளை தங்களின் கண் பார்வையிலேயே ஒவ்வொரு பெற்றோரும் வைத்து கொள்ள வேண்டும். அவ்வாறு வைத்து கொண்டால் மட்டுமே இது போன்ற விபரீதங்களை தடுக்க முடியும்.

ஆசிரியர்கள் அறிவுரை

மத்தூர் அருகே களர்பதி அரசு உயர்நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் மூர்த்தி:-

மத்தூர் பகுதியில் கல்குவாரிகள் அதிகமாக செயல்பட்டு வருகின்றன. கல்குவாரி குட்டைகள், சிறு, சிறு ஏரிகள், குளங்களில் தற்போது நீர் நிரம்பி காணப்படுகிறது. இந்த நிலையில் மத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளன. விடுமுறை தினங்களில் குழந்தைகள் நீர்நிலைகளுக்கு அருகில் சென்று விளையாடாமல் இருக்க பள்ளியில் ஆசிரியர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.

தற்போது எல்லா இடங்களிலும் நீர்நிலைகள் நிரம்பி உள்ளதால் நீச்சல் கற்க செல்பவர்கள் நீர்நிலைகளில் மூழ்கி இறக்கிறார்கள். எனவே நீர்நிலைகளின் அருகில் குழந்தைகள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் அறிவுறுத்த வேண்டும்.

விழிப்புணர்வு

பர்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை அலுவலர் தர்மலிங்கம்:-

தீயணைப்பு துறை சார்பில் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று மாணவ, மாணவிகளுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். பெற்றோர் நீர்நிலைகளின் அருகில் குழந்தைகளை அனுமதிக்க கூடாது. கல்குவாரி நடத்துபவர்கள் அங்கு தண்ணீர் தேங்கி இருந்தால் அப்பகுதிக்கு யாரும் செல்ல முடியாத வகையில் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் ஆபத்தான கால கட்டங்களிலும், இடர்பாடான நேரங்களிலும் அவசர தேவைக்காக தீயணைப்பு துறையை 101, 112 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.

ஆபத்தான கிணறுகள்

பர்கூரை சேர்ந்த சமூக ஆர்வலர் பழனி:-

பர்கூர் பகுதியில் கல்குவாரியில் தேங்கி கிடக்கும் தண்ணீரில் பல குழந்தைகள் மூழ்கி இறந்துள்ளார்கள். குழந்தைகளை பெற்றோர் தங்களின் கண்காணிப்பிலேயே வைத்துக் கொள்ள வேண்டும். பள்ளி விடுமுறை நாட்களில் தான் பல்வேறு இடங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடக்கின்றன.

ஆகவே பெற்றோர் குழந்தைகளை நீர்நிலைகள் அருகில் விளையாட அனுமதிக்க கூடாது. நீச்சல் கற்று தருகிறேன் என்ற பெயரில், ஆபத்தான கிணற்றில் இறங்குவதை தவிர்க்க வேண்டும். சில பெற்றோர் குழந்தைகளை செல்போன் பார்ப்பது கண்ணுக்கு கேடு என்று கூறி, வெளியே சென்று விளையாட சொல்கிறார்கள். ஓடி விளையாடுவது நல்ல விஷயம் தான். அது உங்களின் கண் பார்வைக்குள் இருக்க வேண்டுமே தவிர, பாதுகாப்பற்ற இடங்களின் அருகில் இருக்க கூடாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

===========

2019-ம் ஆண்டு 13 நாளில் 19 பேர் பலியான சோகம்

கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ந் தேதி முதல் அக்டோபர் மாதம் 6-ந் தேதி வரையில் 13 நாட்களில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் நீரில் மூழ்கி 19 பேர் இறந்தனர். கந்திகுப்பம் எலசகிரி மாணவர் ஸ்டீபன் வெர்னே, அவரது தம்பி கெர்சோன் ராஜ், கந்திகுப்பம் தாண்டவன், மாணவிகள் சுபத்ரா, காவ்யா, ஓசூர் மாணவி காவியா (11), ஊத்தங்கரை கீழ்மத்தூர் மாணவர்கள் திலிப்குமார், மணிகண்டன், மகராஜகடை தின்னூர் மாணவர் விக்னேஷ், வேப்பனப்பள்ளி மாணவிகள் யேசுபிரியா, சித்ரா, அனுஷ்கா, சூளகிரி ராமாபுரம் அந்தியூர் பாலாஜி, அவரது மகன் முகில், ஊத்தங்கரை பாம்பாற்றில் பள்ளி மாணவர் சந்தோஷ், கல்லூரி மாணவிகள் கனிதா, சினேகா, புதுப்பெண் நிவேதா உள்பட 19 பேர் இறந்தனர்.

இதில் 16 பேர் மாணவ, மாணவிகள் ஆவர். 13 நாட்களில் மட்டும் 16 மாணவ, மாணவிகள் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலேயே நீர்நிலைகளில் மூழ்கி குறைந்த நாட்களில் அதிகம் பேர் இறந்தது 2019 செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகாரிகள் என்ன செய்ய வேண்டும்

கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொறுத்தவரையில் பல்வேறு குவாரிகளில், ஆபத்தான முறையில் தண்ணீர் தேங்கி உள்ளன. அதில் பலரும் சிக்கி இறக்குகிறார்கள். எனவே குவாரிகளில் தண்ணீர் தேங்காமல் இருக்கவும், பொதுமக்கள் செல்லாமல் இருக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல பாதுகாப்பற்ற முறையில் உள்ள கிணறுகள் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளன என்பதை ஆய்வு செய்து, அவற்றை மூடவும், பொதுமக்கள் அங்கு செல்லாத வகையில் இருக்கவும் உரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும். நீர்நிலைகளின் அருகில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், அணைகளின் அருகில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்க வேண்டும்.


Next Story