ஆத்தூர் அருகே நீர்த்தேக்கத்தில் மூழ்கி புதுமண தம்பதி பலி: திருமணமான 3 நாளில் சோகம்


ஆத்தூர் அருகே நீர்த்தேக்கத்தில் மூழ்கி புதுமண தம்பதி பலி:  திருமணமான 3 நாளில் சோகம்
x

நீண்ட நேரமாகியும் அவர்கள் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. பழனிகுமாரின் செல்போனும் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரை அடுத்த மேல ஆத்தூர் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் மாணிக்கராஜ். விவசாயி. இவருடைய மகன் பழனிகுமார் (வயது 30), கேரள மாநிலத்தில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார்.

இவருக்கும், தூத்துக்குடி முள்ளக்காட்டைச் சேர்ந்த ராமய்யா மகள் முத்துமாரிக்கும் (21) கடந்த 10-ந்தேதி திருமணம் நடந்தது. பின்னர் சுப்பிரமணியபுரத்தில் புதுமண தம்பதி வசித்தனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் பழனிகுமார்-முத்துமாரி தம்பதி தங்களது வீட்டில் உணவு சாப்பிட்டனர். பின்னர் அவர்கள் வீட்டின் அருகில் உள்ள தோட்டத்துக்கு செல்வதாக குடும்பத்தினரிடம் கூறி சென்றனர்.

தொடர்ந்து மாலையில் நீண்ட நேரமாகியும் அவர்கள் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. பழனிகுமாரின் செல்போனும் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. எனவே புதுமண தம்பதியை குடும்பத்தினர், உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர்.

மேலும் உறவினர்களின் வீடுகளுக்கு புதுமண தம்பதி சென்றனரா? அல்லது கேரளாவுக்கு மனைவியை பழனிகுமார் அழைத்து சென்றாரா? என பலரிடமும் செல்போனில் தொடர்பு கொண்டு விசாரித்தனர்.

இந்த நிலையில் இன்று காலையில் மேல ஆத்தூரில் கூட்டு குடிநீர் திட்டத்துக்காக அமைக்கப்பட்டு இருந்த நீர்த்தேக்கத்தில் 2 பேர் பிணமாக மிதந்தனர். இதனைப் பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்து ஆத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தண்ணீரில் பிணமாக மிதந்தவர்களின் உடல்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது இறந்தவர்கள் புதுமண தம்பதி பழனிகுமார்-முத்துமாரி என்பது தெரியவந்தது. இதனை அறிந்த குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர்.


Next Story