போதையில்லா கோவை திட்டம் தொடக்கம்
போதையில்லா கோவை திட்டம் தொடக்கம்
கோவை
கல்லூரி மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போதையில்லா கோவை திட்டம் தொடங்கப்பட்டு உள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் தெரிவித்து உள்ளார்.
செல்போன் ஒப்படைப்பு
கோவை மாவட்டத்தில் காணாமல் போன ரூ.30½ லட்சம் மதிப்பிலான 143 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் கலந்து கொண்டு செல்போன்களை, உரியவர்களிடம் ஒப்படைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்களை மீட்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் மூலம் இதுவரை ரூ.2¼ கோடி மதிப்பிலான 1,265 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. கடந்த ஜனவரி முதல் தற்போது வரை 298 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 401 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.33 லட்சம் மதிப்புள்ள கஞ்சா சாக்லெட், 611 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
பாலியல் வழக்குகள்
மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை 326 திருட்டு வழக்குகளில் 444 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.4¼ கோடி நகைகள், பணம், பொருட்கள் மீட்கப்பட்டு உள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளில் 116 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். நடப்பாண்டில் இதுவரை 128 பாலியல் வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
நடப்பாண்டில் இதுவரை 7 கஞ்சா வியாபாரிகள், குழந்தைகளுக்கு எதிராக பாலியல் தொல்லை கொடுத்த 8 பேர், திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 6 பேர், தொடர் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்திய 4 பேர் என மொத்தம் 25 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கந்து வட்டி தொடர்பாக 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 21 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அனுமதியின்றி மது விற்ற 4,369 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 34,350 மதுபாட்டில்கள், 7,735 லிட்டர் கள்ளச்சாராயம், 40 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
போதையில்லா கோவை
மிஷன் கல்லூரி திட்டத்தின் கீழ் போதை இல்லா கோவை என்ற திட்டம் இன்று (நேற்று) தொடங்கப்பட்டு உள்ளது. இதன்படி கல்லூரி மாணவ-மாணவிகள் இடையே போதை பொருள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும் கல்லூரிகளை சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமின்றி எந்த இடத்தில் கஞ்சா விற்பனை நடைபெற்றாலும் 9003251100 என்ற பிரத்யேக வாட்ஸ்-அப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். அவர்களின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் ரகசியம் காக்கப்படும்.
கோவை மாவட்டத்தில் கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் தற்போது வரை கொலை, கொள்ளை, நகை பறிப்பு, பாலியல் வன்கொடுமை, சூதாட்டம் உள்ளிட்டவை தொடர்பாக 5,719 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 6,691 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.