முத்துநாயக்கன்பட்டி அருகேமருந்து கடை உரிமையாளர் விபத்தில் பலிகர்ப்பிணி மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று விட்டு திரும்பிய போது பரிதாபம்
முத்துநாயக்கன்பட்டி அருகே கர்ப்பிணி மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று விட்டு திரும்பிய போது மோட்டார் சைக்கிள் டிராக்டர் மீது மோதி மருந்து கடை உரிமையாளர் விபத்தில் பரிதாபமாக இறந்தார்.
ஓமலூர்
ஓமலூரை அடுத்த முத்துநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 27). இவர் அந்த பகுதியில் மருந்து கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி தீபிகா (26). இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் தீபிகா 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதையடுத்து கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக நேற்று முன்தினம் காலை சென்றுள்ளனர். பின்னர் மாலை வீடு திரும்பி உள்ளனர்.
அப்போது பாகல்பட்டி தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் அருகே வரும்போது முன்னால் சென்ற தண்ணீர் டேங்குடன் கூடிய டிராக்டர் திடீரென திரும்பியது. இதில் மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் வினோத்குமார், தீபிகா ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சேலம் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். காயம் அடைந்த கர்ப்பிணி தீபிகாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.