கும்பகோணத்தில், முருங்கைக்காய் விலை உயர்வு


கும்பகோணத்தில், முருங்கைக்காய் விலை உயர்வு
x

வரத்து குறைவால் கும்பகோணத்தில் முருங்கைக்காய் விலை உயர்ந்து 1 கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தஞ்சாவூர்

கும்பகோணம்:

தாராசுரம் மார்க்கெட்

கும்பகோணம்- தஞ்சை சாலையில் தாராசுரம் பகுதியில் காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு ஏராளமான மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம், ஒடிசா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

மேலும் இங்கிருந்து மன்னார்குடி, பட்டுக்கோட்டை, நீடாமங்கலம், திருவையாறு, ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் காய்கறிகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கும்பகோணத்தில் கடந்த மாதம் வரை காய்கறிகளின் விலை அதிகரித்து இருந்தது.

முருங்கைக்காய் விலை உயர்வு

தற்போது வரத்து குறைவு காரணமாக முருங்கைக்காய், வெண்டைக்காய், பீன்ஸ், சின்னவெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை திடீரென அதிகரித்துள்ளது. கடந்த மாதம் மொத்த விற்பனை கடைகளில் 1 கிலோ ரூ.20 வரை விற்பனையான முருங்கைக்காய் விலை உயர்ந்து நேற்று ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே போல் வெண்டைக்காயும் விலை அதிரித்து ரூ.20-க்கு விற்பனையானது.

இதே போல் மற்ற காய்கறிகளின் விலையும் சிறிதளவு அதிகரித்துள்ளது. முருங்கைக்காய் விளைச்சல் குறைந்ததால் அதன் வரத்தும் குறைந்து விட்டது. மூட்டை மூட்டையாக விற்பனைக்கு வந்த நிலையில் நேற்று கட்டுகளில் முருங்கைக்காய் கொண்டு வரப்பட்டது. விலை உயர்வு காரணமாக கிலோ கணக்கில் வாங்காமல் ஒன்று, இரண்டு என எண்ணிக்கையில் முருங்கைக்காயை வாங்கி சென்றனர்.

குறைய வாய்ப்பு

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கடந்த மாதம் வரத்து அதிகரிப்பால் முருங்கைக்காய் விலை குறைந்து இருந்ததது. ஆனாலும் யாரும் வாங்காததால் குப்பையில் கொட்டும் நிலை ஏற்பட்டது. முருங்கைக்காய் கடந்த மாதம் கிேலா ரூ.20 வரை விற்பனையானது. தொடர்ந்து படிப்படியாக ரூ.30, ரூ50 என அதிகரித்து தற்போது ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரத்து குறைந்ததால் விலை அதிகரித்துள்ளது. சில்லறை விற்பனை கடைகளில் ரூ.75 முதல் ரூ.85 வரை விற்பனையாகிறது. 1 முருங்கைக்காய் அதன் தன்மையை பொருத்து ரூ.5 முதல் ரூ.8 வரை விற்பனை செய்யப்படுகிறது. விளைச்சல் அதிகரித்தால் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்றனர்.


Next Story