வறண்டு கிடக்கும் தடுப்பணைகள்

கிணத்துக்கடவில் போதிய மழை இல்லாததால், தடுப்பணைகள் வறண்டு கிடக்கின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவில் போதிய மழை இல்லாததால், தடுப்பணைகள் வறண்டு கிடக்கின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
குட்டைகள், தடுப்பணைகள்
கிணத்துக்கடவு தாலுகா, அதிக கிராமங்களை கொண்ட பகுதி ஆகும். இந்த பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. பெரும்பாலான கிராமங்களில் விவசாயம் மானாவாரி மற்றும் தரிசு நிலங்களில் நடைபெற்று வருகிறது. இதனால் விவசாய பணிகளுக்கு எப்போதும் பருவமழையை நம்பியே விவசாயிகள் இருக்கின்றனர். இதற்காக தமிழக அரசு விவசாயிகளின் நலன் கருதி கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் மழை காலங்களில் வரும் தண்ணீரை சேமிக்க பல இடங்களில் மழைநீர் சேகரிப்பு குட்டைகள், தடுப்பணைகளை அமைத்து உள்ளது. இதன் மூலம் அருகில் உள்ள தோட்டங்கள் பசுமையாக இருக்கும். மேலும் கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வற்றாமல் இருக்கும்.
வறண்டு கிடக்கிறது
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கிணத்துக்கடவு பகுதியில் ஓரளவு மழை பெய்தாலும், விவசாயிகளுக்கு ஏற்றதாக அமையவில்லை. தற்போது தென்மேற்கு பருவமழை தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக கிணத்துக்கடவு பகுதியில் பெய்து வருகிறது. ஆனாலும் இந்த மழையால் கிணத்துக்கடவு அருகே அரசம்பாளையம், சொலவம்பாளையம், நல்லட்டிபாளையம், கோடங்கிபாளையம், கோதவாடி உள்ளிட்ட பல கிராமங்களில் உள்ள மழைநீர் சேகரிப்பு குட்டைகள், தடுப்பணைகளுக்கு போதுமான தண்ணீர் வராததால் வறண்டு காணப்படுகிறது.
பி.ஏ.பி. உபரிநீர் வருமா?
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் தென்பருவமழை தீவிரமாக பெய்து வந்தது. இதனால் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது. ஆனால் கிணத்துக்கடவு பகுதியில் தொடர்ந்து மழை பெய்தாலும் ஒருசில குட்டைகள் மட்டுமே நிரம்பி உள்ளன. இதன் மூலம் விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை. பெரும்பாலான குட்டைகள், தடுப்பணைகள் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது. கோவை மாவட்டத்தில் பல பகுதிகளில் பருவமழை தொடர்ந்து பெய்தாலும் கிணத்துக்கடவு பகுதிக்கு எதிர்பார்த்த அளவில் பருவமழை இல்லாதது கவலையை ஏற்படுத்தியுள்ளது. மழை குறைவான பகுதிகளுக்கு பி.ஏ.பி. அணைகளில் இருந்து வீணாகும் உபரி நீரை மழைநீர் சேகரிப்பு குட்டைகள், தடுப்பணைகளுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.






