கருங்கல்பாளையம் சந்தைக்கு தெலுங்கானா, மராட்டிய மாநில வியாபாரிகள் வராததால் மாடுகள் விற்பனை மந்தம்
கருங்கல்பாளையம் சந்தைக்கு தெலுங்கானா, மராட்டிய மாநில வியாபாரிகள் வராததால் மாடுகள் விற்பனை மந்தமாக இருந்தது.
ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டு சந்தை கூடி வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் கூடிய சந்தைக்கு 50 கன்று குட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தது. இது ரூ.6 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனை ஆனது. நேற்று கூடிய சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 350 பசு மாடுகள், 200 எருமை மாடுகள் என மொத்தம் 550 மாடுகள் விற்பனைக்கு வந்தன.
இந்த மாடுகளை தமிழக வியாபாரிகளும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகளும் விவசாயிகளிடம் நேரடியாக விலை பேசி வாகனங்களில் ஏற்றிச்சென்றனர். தெலுங்கானா மற்றும் மராட்டிய மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் கன்று குட்டிகள் மற்றும் மாடுகளை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்து விட்டு, கறவை மாடுகளை வாங்கிச்செல்வது வழக்கம். ஆனால் அந்த மாநிலங்களில் மாடுகள் கடத்திச்செல்லப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் அங்கிருந்து வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தெலுங்கானா மற்றும் மராட்டிய மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்கு வரவில்லை. இதனால் மாடுகள் விற்பனை மந்தமாக இருந்தாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.