வால்பாறையில் தொடரும் கனமழை; தயார் நிலையில் வெள்ள நிவாரண முகாம்கள்


வால்பாறையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வால்பாறை:

வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து இரவு பகலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் முழுவதும் சோலையாறு அணையை சென்று சேர்ந்து வருவதால் தொடர்ந்து சோலையாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை கடந்த ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தீவிரமடையத் தொடங்கியது.ஆனால் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்தே தீவிரமடைந்து வருவதால் வால்பாறை பகுதியில் இந்த ஆண்டு வெள்ளபாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இதனால் வருவாய் துறை, நகராட்சி நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வால்பாறை அரசு கல்லூரி, நகராட்சி சமுதாய கூடம் ஆகிய இடங்களில் வெள்ள நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பொது மக்களுக்கும் ஆற்றோர பகுதியில் வாழும் மக்களுக்கும் வெள்ள எச்சரிக்கை ஒலிபெருக்கி மூலம் விடுக்கப்பட்டு வருகிறது.

வால்பாறை கூழாங்கல் ஆறு,வெள்ளமலைடனல், சோலையார் சுங்கம் ஆறு ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகள் இறங்கி குளிப்பதற்கு போலீசார் தடைவிதித்து கண்காணித்து வருகின்றனர். இருந்தாலும் வெள்ளமலைடனல் பகுதியில் ஆபத்தை உணராமல் பூட்டிய தடுப்புகளையும் தாண்டி சுற்றுலா பயணிகள் அத்துமீறி சென்று புகைப்படம் எடுத்துச் சென்றனர்.

தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக சோலையாறு அணைக்கு விநாடிக்கு 4377 கன அடித் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் சோலையாறு அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ஒரிரு நாளில் சோலையாறு அணை தனது முழு கொள்ளளவான 160 அடியை எட்டிவிடக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


Next Story