தொடர் மழையால் பள்ளியில் குளம்போல தேங்கிய மழைநீர்; திருமண மண்டபத்தில் வைத்து தேர்வு எழுதிய மாணவர்கள்


தொடர் மழையால் பள்ளியில் குளம்போல தேங்கிய மழைநீர்; திருமண மண்டபத்தில் வைத்து தேர்வு எழுதிய மாணவர்கள்
x
தினத்தந்தி 28 Sep 2023 1:30 PM GMT (Updated: 28 Sep 2023 1:30 PM GMT)

தொடர் மழையால் கனகம்மாசத்திரம் அரசு பள்ளியில் குளம்போல மழைநீர் தேங்கியது. வகுப்பறைக்குள்ளும் மழைநீர் தேங்கியதால் தனியார் திருமண மண்டபத்தில் மாணவர்கள் காலாண்டு தேர்வை எழுதினர்.

திருவள்ளூர்

பள்ளியில் தேங்கிய மழைநீர்

திருவாலங்காடு ஒன்றியத்திற்குட்பட்ட கனகம்மாசத்திரம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பருவ மழை காரணமாக கனகம்மாசத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இதனால் அரசு பள்ளியில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி நீச்சல் குளம்போல் காட்சியளிக்கிறது. பள்ளி வளாகம் மட்டுமின்றி வகுப்பறைகள், சத்துணவு கூடம், மைதானம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் மேசைகள், நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்கள் நீரில் மூழ்கி நாசமாகியுள்ளது.

திருமண மண்டபத்தில் தேர்வு

இந்நிலையில் நேற்று காலை காலாண்டு இறுதித் தேர்வு எழுதுவதற்கு பள்ளிக்கு மாணவர்கள் வந்தனர். பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழை நீரில் மாணவ மாணவிகள் பள்ளிக்கு உள்ளே செல்ல முடியாத சூழ்நிலை உருவானதால், மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பள்ளி தலைமையாசிரியர் மாணவர்கள் அனைவரையும் அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அமர வைத்தார். பின்னர் மாணவர்கள் அனைவரும் தரையில் அமர்ந்தவாறு காலாண்டு தேர்வு எழுதினர்.

எனவே திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கனகம்மாசத்திரம் அரசு பள்ளியில் நேரில் ஆய்வு செய்து, தேங்கியுள்ள மழை நீரை அகற்ற நடவடிக்கை வேண்டும், பள்ளியில் மழை நீர் தேங்காதவாறு அந்த பகுதியில் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆண்டுதோறும் மழைக்காலங்களில் பள்ளி வளாகம் முழுவதும் மழை நீர் தேங்குவதால் மாணவ, மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.


Next Story