தொடர் மழை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு.!


தொடர் மழை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு.!
x
தினத்தந்தி 10 Nov 2023 7:26 AM GMT (Updated: 10 Nov 2023 11:54 AM GMT)

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பெய்துவரும் மழையால், அணைகளின் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.

நெல்லை,

தமிழகத்தின் தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் 3 மாவட்டங்களிலும் விவசாய பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. நெல்லை மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. திடீரென கனமழை பெய்வதும், சிறிது நேரம் சாரல் மழை பெய்வதுமாக இருந்தது. மாநகர பகுதியிலும் இதே நிலைதான் நீடித்தது.

இன்று காலை வரையிலும் பெரும்பாலான இடங்களில் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. அணைகளை பொறுத்தவரை மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு அணை பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் அந்த அணைகளின் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இன்று காலையில் மணிமுத்தாறு அணை 1 அடி உயர்ந்து 63.23 அடியாக உள்ளது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 1 அடி உயர்ந்து 92 அடியாக உள்ளது. சேர்வலாறு அணையிலும் நீர் இருப்பு 1 அடி அதிகரித்து 106 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 625 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அவற்றில் நீர் இருப்பு அதிகரித்து வருகிறது. கடனா அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 71.90 அடியாக உள்ளது. ராமநதி அணை நீர்மட்டம் 73.25 அடியாகவும், கருப்பாநதி நீர்மட்டம் 65.25 அடியாகவும் உள்ளது. ராமநதியில் அதிகபட்சமாக 14 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. மிகச்சிறிய அணையான குண்டாறு அணை 35.50 அடியை எட்டியுள்ளது. அடவிநயினார் அணை நீர்மட்டம் தொடர்ந்து 111 அடியில் நீடிக்கிறது.


Next Story