அடிக்கடி ஏற்படும் மின்தடையால்பொதுமக்கள் அவதி
பூம்புகார் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருவெண்காடு:
பூம்புகார் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இறால் வளர்ப்பு
பூம்புகார் மின்வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட பூம்புகார், மேலையூர், வானகிரி, மடத்துக்குப்பம், நாயக்கர் குப்பம், நெய்த வாசல், புதுக்குப்பம், மேலப்பெரும்பள்ளம் மற்றும் கீழப்பெரும்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அதோடு மட்டுமல்லாமல் பூம்புகார் மற்றும் வானகிரி கடலோர பகுதிகளில் இறால் வளர்ப்பு தொழிலில் ஏராளமானவர்கள் ஈடுபட்டுள்ளனர். மேற்கண்ட பகுதிகளுக்கு திருவெண்காடு துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் செய்யப்படுகிறது.
அடிக்கடி மின்தடை
அதாவது குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு தனி மின் பாதையும், இறால் வளர்ப்பு தொழிலுக்கென தொழிற்சாலை மின் பாதையும் தனித்தனியாக அமைக்கப்பட்டு மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மின்வாரியத்திற்கு அதிக வருமானம் ஈட்டி தரும் பகுதியாக பூம்புகார் விளங்குகிறது என்றால் மிகை ஆகாது.
ஆனாலும் பூம்புகார் பகுதியில் மின் வினியோகம் செய்வதில் அடிக்கடி குளறுபடிகள் ஏற்படுவதால் மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மீனவ கிராமங்கள்
இதுகுறித்து பூம்புகார் அருகே பழையகரம் கிராமத்தை சேர்ந்த பாண்டியன் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், பூம்புகார் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் விவசாயிகள், பொதுமக்கள், இறால் வளர்ப்பு தொழில் செய்வோர், மீனவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
கடலோர கிராமங்களை உள்ளடக்கிய பூம்புகார், வானகிரி உள்ளிட்ட கடலோர மீனவ கிராமங்களுக்கு நல்ல நீர் கிடைக்கக்கூடிய இடத்தில் போர் செய்து எடுக்கப்படுகின்ற நீரை மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் சேகரிக்கப்பட்டு பைப்லைன் மூலம் வினியோகிக்கப்படுகிறது.
சாரல்மழை பெய்தால்கூட...
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மோட்டாரை இயக்க மின்சாரம் அவசியம் தேவைப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் சாரல் மழை பெய்த நிலையில் மின் தடை ஏற்பட்டது. இரவு முழுவதும் மின்தடையால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இது குறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் புகார் செய்தும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. சிறிது நேரம் மழை பெய்தாலே மின்தடை ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. இதனை கருத்தில் கொண்டு மின் தடை ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.