நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஆழியாறு அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக  ஆழியாறு அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்  கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x

ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அணை முழுகொள்ளளவு

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. அணைக்கு அப்பர் ஆழியாறு மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் மூலம் நீர்வரத்து உள்ளது. இந்த அணை மூலம் புதிய, பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகள் மற்றும் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இதை தவிர கேரளாவுக்கு ஆண்டுதோறும் ஒப்பந்தப்படி தண்ணீர் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2 மாதமாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக அணை முழுகொள்ளளவை எட்டியது. இதன் காரணமாக கடந்த 4-ந்தேதி அணையின் பாதுகாப்பு கருதி 11 மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது. பின்னர் நீர்வரத்தை பொறுத்து மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பது குறைக்கப்பட்டது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.

தண்ணீர் திறப்பு

இந்த நிலையில் ஆழியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் அணைக்கு திடீரென்று வினாடிக்கு 1500 கன அடி நீர்வந்தது. இதையடுத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையின் பாதுகாப்பு கருதி 3 மதகுகள் வழியாக வினாடிக்கு 1100 கன அடி நீர் வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், தென்மேற்கு பருவமழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் தற்போது 117.90 அடியாக உள்ளது. இந்த நிலையில் மழையின் காரணமாக அணைக்கு திடீரென்று நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து நீர்வரத்தை கண்காணித்து வருகின்றோம். நீர்வரத்தை பொறுத்து மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்படும் என்றனர்.


Next Story