வரத்து குறைவால் தேங்காய் பருப்பு விலை உயர்வு


வரத்து குறைவால் தேங்காய் பருப்பு விலை உயர்வு
x

வரத்து குறைவால் தேங்காய் பருப்பு விலை உயர்ந்துள்ளது.

கரூர்

கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், குளத்துப்பாளையம், வேட்டமங்கலம், குந்தாணிபாளையம், ஓலப்பாளையம், சேமங்கி, முத்தனூர், ஒரம்புப்பாளையம், நல்லிகோவில், பழமாபுரம், புன்னம்சத்திரம், புன்னம், நடையனூர், திருக்காடுதுறை, தவிட்டுப்பாளையம், நஞ்சைபுகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் தென்னை பயிரிட்டுள்ளனர். தென்னை மரத்தில் தேங்காய் முதிர்ச்சி அடையும் தருவாயில் உள்ளபோது கூலி ஆட்கள் மூலம் தேங்காயை பறித்து மட்டையை அகற்றிவிட்டு முழு தேங்காயாகவும், அதேபோல் தேங்காயில் உள்ள தேங்காய் பருப்பை எடுத்து நன்கு உலர வைத்துஎடுத்த தேங்காய் பருப்பையும் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். அதேபோல் திங்கட்கிழமை தோறும் இளங்கோ நகர், வெள்ளதாரை, நடையனூர், முனிநாதபுரம், நொய்யல் உள்ளிட்ட பகுதிகளுக்கு வியாபாரிகள் வந்து, அப்போது சாலை ஓரத்தில் அமர்ந்திருந்து விவசாயிகள் கொண்டுவரும் தேங்காய் மற்றும் தேங்காய் பருப்புகளை கிலோ கணக்கில் வாங்கி லாரிகள் மூலம் எடுத்துச்செல்கின்றனர். வாங்கிய தேங்காய் பருப்புகளை பிரபலமான எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். மேலும் தேங்காய் மற்றும் தேங்காய் பருப்புகளை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் ஒரு கிலோ முழுத்தேங்காய் அதிகபட்ச விலையாக ரூ.26-க்கும், தேங்காய் பருப்பு ஒரு கிலோ அதிகபட்ச விலையாக ரூ.80.70-க்கும் வாங்கிச்சென்றனர். இந்த வாரம் முழுத் தேங்காய் அதிகபட்ச விலையாக ரூ.25-க்கும், தேங்காய் பருப்பு ஒரு கிலோ அதிகபட்ச விலையாக ரூ.82.19-க்கும் வாங்கிச் சென்றனர். தேங்காய் பருப்பு வரத்து குறைவால் தேங்காய் பருப்பு விலை உயர்ந்துள்ளது. முழுத் தேங்காய் வரத்து அதிகரிப்பால் தேங்காய் விலை குறைந்துள்ளது.


Next Story