வெளியூர்களுக்கு பஸ்கள் இல்லாததால் கோயம்பேடு பஸ்நிலையத்தில் இரவில் குடும்பத்துடன் தவித்த பயணிகள்...!
பஸ் நிலையத்தில் இரவு நேரங்களில் கூடுதல் பேருந்துகள் முறையாக இயக்கப்படவில்லை என்பது பயணிகளின் குற்றச்சாட்டாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
கோயம்பேடு,
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் சென்னையில் வசிக்கக்கூடிய வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்களது பிள்ளைகளுடன் சொந்த ஊர்களுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து நெய்வேலி, பெரம்பலூர், கடலூர், விருதாச்சலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்ல ஏராளமான பயணிகள் வந்திருந்தனர்.
நீண்ட நேரமாக அந்த பகுதிகளுக்கு செல்லக்கூடிய அரசு பேருந்துகள் வராத காரணத்தால் ஆத்திரமடைந்த பயணிகள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பின்னர் போக்குவரத்து துறை அதிகாரிகள் காத்திருந்த பயணிகளின் வசதிக்கேற்ப அந்தந்த பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் நீண்ட நேரமாக பேருந்துகள் இல்லாததால் இயக்கப்பட்ட கூடுதல் பேருந்தில் பயணிகள் முண்டியடித்து கொண்டு ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பஸ் நிலையத்தில் இரவு நேரங்களில் கூடுதல் பேருந்துகள் முறையாக இயக்கப்படவில்லை என்பது பயணிகளின் குற்றச்சாட்டாக உள்ளது குறிப்பிடத்தக்கது.