ஓய்வூதிய பலன்களை வழங்காததால் தேனி கூட்டுறவு வங்கியில் பொருட்கள் ஜப்தி
ஓய்வூதிய பலன்களை வழங்காததால், தேனி அல்லிநகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பொருட்கள் ஜப்தி செய்யப்பட்டன.
கோர்ட்டு உத்தரவு
தேனி அருகே வடபுதுப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவர், தேனி அல்லிநகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2007-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார். ஆனால், அவருக்கான 36 மாத சம்பளம் மற்றும் பணப்பலன்கள் வழங்கப்படாமல் இருந்தது.
இதுகுறித்து அவர் மதுரை தொழிலாளர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அவருக்கு சேர வேண்டிய ரூ.6 லட்சத்து 61 ஆயிரத்து 21 தொகையை வழங்க வேண்டும் என்று 2019-ம் ஆண்டு கோர்ட்டு உத்தரவிட்டது.
ஆனால், அவருக்கான பணப்பலன்கள் வழங்கப்படவில்லை. இதையடுத்து அவர் மதுரை தொழிலாளர் கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தார். இதனால் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள கோர்ட்டு உத்தரவிட்டது.
பொருட்கள் ஜப்தி
அதன்படி அல்லிநகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் பொருட்களை ஜப்தி செய்வதற்காக முருகேசனுடன், வக்கீல் மாரியப்பன் மற்றும் கோர்ட்டு பணியாளர் கடந்த மாதம் 9-ந்தேதி அந்த அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது வங்கியில் இருந்த அலுவலர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து ஒரு வார கால அவகாசம் கேட்டனர் இதனால் ஜப்தி நடவடிக்கை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
ஆனாலும் தீர்வு கிடைக்காததால் முருகேசன் தனது வக்கீல் மற்றும் கோர்ட்டு அமீனா ராமச்சந்திரன் ஆகியோருடன் அல்லிநகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்துக்கு நேற்று வந்தார்.
பின்னர் அவர்கள் அந்த அலுவலகத்தில் இருந்த கணினி, மேஜை, இரும்பு அலமாரி, மின்விசிறி போன்ற பொருட்களை ஜப்தி செய்தனர். ஜப்தி செய்த பொருட்களை ஒரு சரக்கு வேனில் ஏற்றி எடுத்துச் சென்றனர். இந்த ஜப்தி நடவடிக்கை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.