வங்க கடலில் பலத்த காற்று வீசுவதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி மறுப்பு
வங்க கடலில் பலத்த காற்று வீசுவதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
பலத்த காற்று
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இதில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம். இந்தநிலையில் வங்க கடலில் பலத்த காற்று வீசுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க மீன்வளத்துறையினரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனால் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. மேலும், இவர்களின் விசைப்படகுகள் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 3-ந் தேதி கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விசைப்படகுகள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க மீன்வளத்துறையால் 10 நாட்கள் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வாழ்வாதாரம் பாதிப்பு
இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில் இந்த மாதத்தில் (ஆகஸ்டு) குறைந்த நாட்கள் தான் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றுள்ளோம். கடந்த 3-ந் தேதி பலத்த காற்று வீசியதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடிக்க மீன்வளத்துறையால் தடை விதிக்கப்பட்டது. இதனால் 10 நாட்கள் கழித்து கடந்த 13-ந் தேதி தான் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றோம்.
இந்நிலையில் மறுபடியும் இப்பகுதியில் பலத்த காற்று வீசப்படும் என்பதற்காக மீன்வளத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடிக்க தடை விதித்துள்ளனர். இந்த தடையினால் இப்பகுதியை சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. எனவே தமிழக அரசு மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.