குமரியில் பெய்த கனமழையால் மாம்பழத்துறையாறு அணை நிரம்பியது


குமரியில் பெய்த கனமழையால் மாம்பழத்துறையாறு அணை நிரம்பியது
x
தினத்தந்தி 21 Oct 2023 6:45 PM GMT (Updated: 21 Oct 2023 6:45 PM GMT)

குமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் மாம்பழத்துறையாறு அணை நிரம்பி மறுகால் பாய்கிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கொட்டாரத்தில் 74.6 மில்லி மீட்டர் மழை பதிவானது.

கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் குளு...குளு... சீசன் நிலவுகிறது. தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக மேற்கு மாவட்ட பகுதிகளான வைக்கலூர், முன்சிறை, சைமன்காலனி போன்ற பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

மலையோர மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணையில் 40.40 அடியும், பெருஞ்சாணியில் 69.75 அடியும் நீர் இருப்பு உள்ளது.

வில்லுக்குறி அருகே 54.12 அடி கொள்ளளவு கொண்ட மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் கடந்த 2-ந் தேதி 3.28 அடியாக இருந்தது. அதன்பிறகு கொட்டித் தீர்த்த மழையால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து, 20 நாளில் முழுகொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் அணை நிரம்பி மறுகால் வழியாக வெள்ளம் பாய்கிறது. தற்போது அணைக்கு வினாடிக்கு 62 கனஅடி நீர் வருகிறது. அந்த தண்ணீர் முழுவதும் உபரிநீராக வெளியேற்றப்படுகிறது.

இதுபோல் முக்கடல் அணை நிரம்ப 1½ அடி மட்டுமே உள்ளது. இதனால் ஓரிரு நாளில் முக்கடல் அணையும் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திற்பரப்பு அருவியில் தொடர்ந்து தண்ணீர் கொட்டி வருவதால் நேற்று 9-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர். குமரியில் 2,144 குளங்கள் உள்ளன. அதில் தற்போதுவரை 1,188 குளங்கள் நிரம்பி உள்ளன.

மாவட்டம் முழுவதும் மழை பெய்து வரும் நிலையில் அதிகபட்சமாக கொட்டாரத்தில் 74.6 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பல்வேறு இடங்களில் பதிவான மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

சிற்றார் 1- 28.2, சிற்றார் 2- 36.6, பூதப்பாண்டி- 5.2, களியல்- 7.4, மயிலாடி- 43.2, நாகர்கோவில்- 27.2, ஆரல்வாய்மொழி- 35, பெருஞ்சாணி- 2.8, புத்தன்அணை- 2, சுருளோடு- 5, தக்கலை- 22.4, குளச்சல்- 13, இரணியல்- 15.6, மாம்பழத்துறையாறு- 45, திற்பரப்பு- 8.2, கோழிப்போர்விளை- 5.3, அடையாமடை- 17.2, குருந்தன்கோடு- 35.4, முள்ளங்கினாவிளை- 43.6, முக்கடல்- 15.4 என்ற அளவில் மழை பெய்திருந்தது.

தொடர்மழை காரணமாக மாவட்டம் முழுவதும் ஏற்கனவே 150-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளது. நேற்று மழைக்கு அகஸ்தீஸ்வரம் தாலுகா பகுதியில் மேலும் ஒரு வீடு இடிந்தது.


Next Story