அடிப்படை வசதிகள் இல்லாததால் சிலிண்டர், அடுப்புடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கிராம மக்கள் போராட்டம்
அடிப்படை வசதிகள் இல்லாததால் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு சிலிண்டர், அடுப்புடன் வந்து காத்திருக்கும் போராட்டம் நடத்திய பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
அடிப்படை வசதிகள் இல்லாததால் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு சிலிண்டர், அடுப்புடன் வந்து காத்திருக்கும் போராட்டம் நடத்திய பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டம்
இளையான்குடி அருகே உள்ள இ.சுந்தனேந்தல் கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இக்கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கிராம தலைவர் பூமிநாதன் தலைமையில் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் கியாஸ் சிலிண்டர், அடுப்பு, காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக கிராம தலைவர் பூமிநாதன் கூறியதாவது:- எங்கள் கிராமத்தில் பள்ளிக்கூடத்தில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கழிப்பறை இல்லாமல் மிகவும் அவதிப்படுகின்றனர். இங்கு தண்ணீர் வசதியுடன் கழிப்பறை அமைத்து தர வேண்டும். மேலும் கண்மாயை தூர்வாரி பல ஆண்டுகளுக்கு மேலாகிறது. அத்துடன் மடை பழுதாகி பாசனநீர் வெளியேறுகிறது. இதை சீரமைக்க வேண்டும். எங்கள் கிராம குடிநீர் தேவைக்கு காவிரி கூட்டு குடிநீரை மட்டுமே முழுமையாக நம்பி இருக்கின்றோம். கடந்த சில மாதங்களாக காவிரி குடிநீர் சரிவர கிடைக்கவில்லை.
பரபரப்பு
மேலும் அடிக்கடி மின் அழுத்த குறைபாடு காரணமாக விளக்குகள் சரிவர எரிவது இல்லை. எனவே எங்கள் கிராமத்தில் ஒரு புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பல தடவை அதிகாரிகளுக்கு மனு கொடுத்துள்ளோம் ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நடவடிக்கை எடுக்கும் வரை கலெக்டர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.
இதுகுறித்து அறிந்த ஊராட்சிகளின் உதவி இயக்குனர் குமார், இளையான்குடி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ, சிவகங்கை தாசில்தார் பாலகுரு மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.