மழை இல்லாததால் 54 அடியாக குறைந்த வைகை அணை நீர்மட்டம்
மழை இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் 54 அடியாக குறைந்தது
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. கடந்த மாதம் தேனி மாவட்டத்தில் மழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் இந்த மாத தொடக்கத்தில் 64 அடியாக இருந்தது. இதையடுத்து அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட முதல்போகம் மற்றும் ஒரு போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
தென்மேற்கு பருவமழை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் அணையில் இருந்து பாசனத்திற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் மழை போதுமான அளவு பெய்யவில்லை. இதனால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. மேலும் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவை விட நீர்வரத்து குறைவாக இருந்ததால் வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
இந்நிலையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 54.33 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 298 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனம் மற்றும் மதுரை மாநகர குடிநீர் தேவைக்கு வினாடிக்கு 869 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதற்கிடையே வைகை அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.