துலாக்கட்ட காவிரி ஆற்றில் பாதாள சாக்கடை நீர் கலப்பதை தடுக்க வேண்டும்


துலாக்கட்ட  காவிரி ஆற்றில் பாதாள சாக்கடை நீர் கலப்பதை தடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 8 Oct 2023 6:45 PM GMT (Updated: 8 Oct 2023 6:47 PM GMT)

மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரி ஆற்றில் பாதாள சாக்கடை நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

ஐப்பசி துலா உற்சவம்

மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் காவிரி ஆற்றின் கரைகளில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் துலா உற்சவம் நடைபெறும். இந்த துலா உற்சவத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரி கரைகளில் புனித நீராடி செல்வது வழக்கம். இந்த ஆண்டு வரும் ஐப்பசி மாதம் துலா உற்சவம் நடைபெற உள்ள நிலையில் காவிரி ஆற்றில் பாதாளசாக்கடை கழிவுநீர் தொடர்ந்து கலந்து வருவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சட்டமன்ற கணக்கீட்டு குழுவினர் ஆய்வு செய்து ரூ.100 கோடி மதிப்பீட்டில் புதிதாக பாதாளசாக்கடை திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு பரிந்துரைத்தது. ஆனாலும் அந்த பரிந்துரை குறித்து இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி மயிலாடுதுறை நகரில் பல்வேறு இடங்களில் பாதாளசாக்கடை உடைப்பெடுத்து சாலைகள் உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டு சரிசெய்வது தொடர்கதையாக இருந்து வருகிறது.

ஆற்றில் கலக்கும் சாக்கடை நீர்

இந்த நிலையில் மயிலாடுதுறை நகரில் பாதாள சாக்கடை ஆள்நுழைவு தொட்டிகளின் வழியாக பாதாளசாக்கடை நீர் வெளியேறி சாலைகள் வாய்க்கால்கள் ஆறுகளில் கலந்து வருகிறது. கடந்த பல மாதங்களாக பாதாளசாக்கடை கழிவுநீர் காவிரி ஆற்றில் கலந்து வருகிறது. தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் செல்லாததால் கழிவுநீர் அதிக அளவில் காவிரி ஆற்றில் கலந்து கருமைநிறத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடி பாவ விமோசனம் அடைந்தது போல் புராண வரலாறு கொண்ட நிகழ்வாக ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் நடைபெறும் காவிரி துலா உற்சவம் இன்னும் 10 தினங்களில் தொடங்க உள்ளது. துலா உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராட இருப்பதால் காவிரியில் பாதாளசாக்கடை கழிவுநீர் கலப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் அனைவரின் கோரிக்கையாக உள்ளது.


Next Story