தென்மேற்கு பருவமழையின் போது குடிமராமத்து பணிகள் நடக்காத 3,422 கண்மாய்கள் வறண்டன-ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு


தென்மேற்கு பருவமழையின் போது குடிமராமத்து பணிகள் நடக்காத 3,422 கண்மாய்கள் வறண்டன-ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
x

தென்மேற்கு பருவமழையின் போது குடிமராமத்து பணிகள் செய்யாததால் 3 ஆயிரத்து 422 கண்மாய்கள் வறண்டு போய் உள்ளது என்று ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டி உள்ளார்.

மதுரை


விவசாயத்திற்கு...

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பருவமழைக்கு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அரசின் முதன்மை கடமையாகும். ஆனால் தமிழக அரசு இதிலும் மெத்தனமாக இருக்கிறது. தென்மேற்கு பருவமழை முடிந்து தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது.

தென்மேற்கு பருவமழை மூலம் நமக்கு போதிய அளவு மழை பொழிவு கிடைத்திருக்கிறதா? அதை சேமித்து வைத்து இருக்கிறோமா என்றால் அதற்கு பதில் இல்லை என்பது தான். தமிழகம் முழுவதும் 14,314 கண்மாய்கள் உள்ள நிலையில், 469 கண்மாய்களில் மட்டுமே முழுமையாக நீர் நிரம்பி உள்ளது. 3,422 கண்மாய்களில், அதாவது 24 சதவீதம் கண்மாய்கள் முற்றிலுமாக வறண்டு உள்ளது. அதற்கு தென்மேற்கு பருவமழை குறைவு என்று சொல்லப்பட்டாலும் குடிமராமத்து பணிகள் செய்யாதது தான் முதன்மை காரணம் ஆகும். இந்த வடகிழக்கு பருவமழைகாலத்தில் கண்மாய் நிரம்புவதற்கு குடிமராமத்து திட்டம் செய்தால் கண்மாய்கள் நிரம்ப வாய்ப்புள்ளது என்று விவசாயிகள் கூறுகிறார்கள்.

ஏனென்றால் இந்த வடகிழக்கு பருவமழையில் நமக்கு 45 முதல் 65 சதவீதம் வரை குடிநீருக்கும், விவசாயத்துக்கும் கிடைக்கும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கை எதுவும் முழுமை பெறவில்லை. மழை நீர் வடிகால் பணிகள் 50 சதவீதம் தான் முடிந்து இருக்கிறது.

மையங்கள்

கடந்த காலத்தில் வர்தா புயல், ஒக்கி புயல், கஜா புயல், நிவர் புயல் ஆகியவற்றில் பெற்ற அனுபவங்களை அடிப்படையாக வைத்து அ.தி.மு.க. ஆட்சியின்போது தமிழகத்தில் 4,133 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டன.

அதில் மிகவும் பாதிப்புக்குள்ளான பகுதிகள் 321 ஆகும். அதிக பாதிப்பு உள்ளாகும் பகுதிகள் 797. மிதமாக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் 1,096. குறைவாக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் 1,919 ஆகும். இந்த இடங்களில் எல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் உள்பட 4,713 மையங்கள் தயார் நிலையில் வைத்திருந்தோம். ஆனால் இப்போது எந்த நடவடிக்கையும் இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story