திருச்சியில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் ரூ.31 லட்சம் பறிமுதல்


திருச்சியில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் ரூ.31 லட்சம் பறிமுதல்
x

திருச்சியில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி ரூ.31 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

உதவி செயற்ெபாறியாளர் அலுவலகம்

திருச்சி ஹீபர் ரோட்டில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை ஆற்றுப்பாதுகாப்பு உதவி செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் கட்டளை மேட்டு வாய்க்கால் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெற்றதாக திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று மதியம் 2.30 மணியளவில் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையிலான அதிகாரிகள் அதிரடியாக பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை ஆற்றுப்பாதுகாப்பு உதவி செயற்பொறியாளர் அலுவலகத்துக்குள் அதிரடியாக சென்று சோதனையிட்டனர். இந்த சோதனையின்போது, உதவி செயற்பொறியாளர் கந்தசாமி, உதவி பொறியாளர் மணிமோகன் ஆகியோரது அலுவலக அறையில் கணக்கில் வராத ரூ.31 லட்சம் இருந்தது.

பறிமுதல்

இதுபற்றி விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். அந்த பணத்திற்கு எந்தவித ஆவணங்களும் இல்லை. அதனை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அங்கிருந்து பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றினர். மேலும் அங்கிருந்த ஊழியர்களிடமும் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை தொடர்ந்து இரவு 7 மணி வரை நடந்தது.

பின்னர் இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதனைத்தொடர்ந்து திருச்சி திருவானைக்காவல் கும்பகோணத்தான் சாலை பகுதியில் உள்ள கந்தசாமியின் வீட்டிலும், கலெக்டர் அலுவலக சாலை ராஜா காலனி பகுதியில் உள்ள மணிமோகன் வீட்டிலும் சோதனை நடத்தினர்.

இதில் மணிமோகன் வீட்டில் ரூ.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.


Next Story