சீறிய காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்கள்


சீறிய காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள தாதனேந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட பொக்கனாரேந்தல் கிராமத்தில் நேற்று சாத்தார் உடையார் அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு சமத்துவ எருதுகட்டு விழா நடைபெற்றது. விழாவை காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இந்த விழாவில் திருப்புல்லாணி யூனியன் தலைவர் புல்லாணி, ராமநாதபுரம் யூனியன் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட பிரமுகர்களும், 22 கிராம கமிட்டி நிர்வாகிகளும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

முதலாவதாக முத்துவீரப்பன் வலசை கோவில் காளை மைதானத்தில் விடப்பட்டது. காளையின் கழுத்தில் பெரிய வட கயிறு கட்டப்பட்டு, வீரர்கள் வட கயிறை பிடித்து மைதானத்தை 3 முறை சுற்றி வலம் வந்தனர். கோவில் காளை என்பதால், வீரர்கள் யாரும் அதை பிடிக்கவில்லை. தொடர்ந்து ராமநாதபுரம், முதுகுளத்தூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் வந்த 40-க்கும் மேற்பட்ட மாடுகள் எருதுகட்டு விழாவில் கலந்துகொண்டன. இந்த காளைகளை ராமநாதபுரம், சிவகங்கை, நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 100-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு, ஆர்வமுடன் அடக்கினர். இதில் பல காளைகள் வீரர்களிடம் பிடிகொடுக்காமல் மைதானத்தை சுற்றி வந்து மிரட்டின. பல காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு விழா கமிட்டி சார்பாக சில்வர் பாத்திரம் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன. பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை 22 கிராம கமிட்டி நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் இணைந்து செய்திருந்தனர். அரசு அனுமதியுடன் விரைவில் இதே கிராமத்தில் ஜல்லிக்கட்டு விழா நடத்தவும் 22 கிராம கமிட்டி நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.


Next Story