அதிமுக மாநாட்டை எழுச்சியாக நடத்த 11 மாவட்டங்களில் ஆலோசனை கூட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


அதிமுக மாநாட்டை எழுச்சியாக நடத்த 11 மாவட்டங்களில் ஆலோசனை கூட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x

அதிமுக மாநாட்டை எழுச்சியாக நடத்த 11 மாவட்டங்களில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை,

அடுத்த மாதம் 20-ந்தேதி மதுரையில் அ.தி.மு.க. சார்பில் "வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு" என்ற தலைப்பில் பிரமாண்ட மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டிற்கான கால் நாட்டு பணிகள் சமீபத்தில் நடந்தது. தமிழகம் முழுவதும் மாநாட்டிற்கான பணிகளை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை தினமும் தொடர்பு கொண்டு முடுக்கி விட்டு கொண்டிருக்கிறார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து ஏராளமான தொண்டர்கள் கலந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்கான வாகனங்கள், தங்கும் இடம் உள்பட அனைத்து ஏற்பாடுகளையும் கவனிக்க தனித்தனியே நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

இதையொட்டி எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மாநாடு சிறப்புடன் நடைபெறுவதற்கு 11 மாவட்டங்களில் ஆலோசனைக் கூட்டங்கள் வருகிற 28-ந் தேதி முதல் நடக்கிறது. இதில் மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆலோசனை வழங்க உள்ளனர். 28-ந்தேதி காலை 10 மணிக்கு ராமநாதபுரம் ஏபிஷா திருமண மண்டபத்திலும், மாலை சிவகங்கை மாவட்ட நிர்வாகிகளுடன் முத்து மகாலிலும் 29-ந்தேதி காலை விருதுநகர் மாவட்டத்தினருடன் சிவகாசி ஜாபோஸ் மண்டபத்திலும், மாலை தூத்துக்குடி நிர்வாகிகளுடன் மாணிக்கம் மகாலிலும் கூட்டம் நடக்கிறது.

30-ந்தேதி காலை நெல்லை மாவட்ட நிர்வாகிகளுடன் மாதா மாளிகையிலும் மாலை தென்காசி நிர்வாகிகளுடன் இசக்கி மகாலிலும், 31-ந்தேதி காலை தேனி வேலுச்சாமி மண்டபத்திலும் மாலை 3 மணிக்கு மதுரை மாவட்ட நிர்வாகிகளுடன் மாநாட்டு மைதானத்திலும் அடுத்த மாதம் 1-ந்தேதி காலை புதுக்கோட்டை மகாராஜா மகாலிலும், மாலை திருச்சி எஸ்.பி.எஸ். மகாலிலும், 2-ந்தேதி காலை கன்னியாகுமரி நிர்வாகிகளுடன் நாகர்கோவிலில் ஒய்.ஆர். திருமண மண்டபத்திலும் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் சிறப்பாக செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story