திருச்சி போலீஸ் நிலையத்தில் இருதரப்பு திமுகவினர் மோதல்: ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் திமுக அரசு - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
திருச்சி காவல் நிலையத்தில் இருதரப்பு திமுகவினர் மோதல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
திருச்சி சிவா திமுக எம்.பி.,யாக உள்ளார். இவரது வீட்டின் அருகே உள்ள டென்னிஸ் விளையாட்டு மைதான திறப்பு விழா இன்று (மார்ச் 15) நடைபெற்றது. இதற்கான அழைப்பிதழில் எம்.பி.,யின் பெயர் புறக்கணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அமைச்சர் கே.என்.நேரு திறப்பு விழாவில் பங்கேற்றார். அப்போது சிவானின் ஆதரவாளர்கள், கே.என்.நேருவிற்கு எதிராக கோஷமிட்டதாக தெரிகிறது. நேருவின் காரையும் வழிமறித்தனர்.
கோபமடைந்த நேருவின் ஆதரவாளர்கள் மாநகராட்சி கவுன்சிலர்கள் முத்துச்செல்வம், காஜாமலை விஜய் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்கள் சிவா வீட்டிற்கு வந்து கார் மற்றும் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உள்ளிட்ட பொருட்களை அடித்து சேதப்படுத்தினர்.
அங்கிருந்த போலீசாரும் தடுக்கவில்லை என கூறப்படுகிறது. அமைச்சரின் காரை மறித்த சிவாவின் ஆதரவாளர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட திருச்சி சிவாவின் ஆதரவாளர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். அங்கும் வந்த நேருவின் ஆதரவாளர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து சிவாவின் ஆதரவாளர்களை தாக்கினர். இதில் அவர்களை தடுத்த பெண் போலீஸ் ஒருவரை கீழே தள்ளியதில் அவர் காயமடைந்தார்.
இந்தநிலையில், திருச்சி நீதிமன்ற காவல்நிலையத்தில் திமுக அமைச்சர், எம்.பி ஆதரவாளர்கள் மோதிக்கொண்ட விவகாரத்தில் 30க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளரும், திமுக பகுதிச் செயலாளருமான திருப்பதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி, நீதிமன்ற அமர்வு காவல் நிலையத்தில் பெண் காவலர் சாந்தியை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், திருச்சி காவல் நிலையத்தில் இருதரப்பு திமுகவினர் மோதல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில்,
தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வண்ணம், காவல்நிலையத்திற்குள்ளேயே புகுந்து நேரடியாக வன்முறை வெறியாட்டம் நடத்தும் அராஜக திமுகவினரால், இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ரவுடிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது.
ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் இந்த அரசு நீடிக்கும் ஒவ்வொரு நிமிடமும் தமிழகத்துக்கு அச்சுறுத்தலாகவும், பொது அமைதிக்கு ஆபத்தாகவும் இருப்பதை மக்கள் உணரத் துவங்கியுள்ளனர். காவல்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்-அமைச்சர் இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.