எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவை வழி நடத்த தகுதியானவர் - பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி
எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவை வழி நடத்த தகுதியானவர் என பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.
சென்னை,
அதிமுகவில் உள்கட்சி பிரச்சினை இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. இரட்டை தலைமைக்கு எதிராக வெடித்த உட்கட்சி பிளவால் தற்போது எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் என 2 தரப்பு தனித்தனியே செயல்பட்டு வருகிறது.
டெல்லியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
அதிமுக அலுவலகம் தொடர்பான விஷயத்தில் சிபிஐ விசாரிக்க வேண்டும் எனக்கூறி வழக்கு தொடர்ந்துள்ளோம். நியாயமாக விசாரிக்க வேண்டும் என கூறியுள்ளோம். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்.
எம்ஜிஆர், ஜெயலலிதா வாழ்ந்த அதிமுக அலுவலகமான எங்கள் கோவிலை காலால் எட்டி உதைத்து அக்கிரமம் செய்தவர்கள் கண்டிப்பாக சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும். இந்த வழக்கில் குற்றவாளிகளை நீதிமன்றம் தான் நிர்ணயம் செய்யும்.மேலும் குற்றவாளிகள் யார்? என்பதை தமிழக மக்களே தொலைக்காட்சியின் வாயிலாக பார்த்துள்ளன.
அதிமுக பொதுக்குழு தொடர்பான தீர்ப்பு என்பது அதிமுக கட்சி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சிறப்பாக செயல்படும் வகையில் அமையும் என கருதுகிறேன். அதிமுக என்றால் எடப்பாடி பழனிச்சாமி. எடப்பாடி பழனிச்சாமி என்றால் அதிமுக. தமிழகத்தில் 4 ஆண்டுகால ஆட்சியை எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக நடத்தினார். எம்ஜிஆர் வழியில் ஜெயலலிதா, ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக கட்சியை வழிநடத்தினார். நடத்தி கொண்டிருக்கிறார். நடத்துவார்'' ஓபிஎஸ் - ஈபிஎஸ் இணைந்து செயல்படுவது தொடர்பாக பதிலளிக்க முடியாது என்றார்.