எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது


எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
x

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது.

சென்னை,

அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ் இபிஎஸ் என அதிமுக பிளவு பட்டுள்ளது. இதனையடுத்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கியும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஓபிஎஸ் அணி- இபிஎஸ் அணி என அதிமுக செயல்பட்டு வருவதால் கட்சியின் அடிப்படை தொண்டர்கள் கடும் வேதனை அடைந்துள்ளனர். இந்த நிலையில் அதிமுக யாருக்கு என்ற போட்டியின் காரணமாக நீதிமன்றத்தில் இரு தரப்பும் வழக்கு தொடுத்தது.

இந்த வழக்கின் தீர்ப்பானது இரு தரப்புக்கும் சாதகமாக மாறி மாறி வருகிறது. இதனையடுத்து தற்போது சுப்ரீம் கோர்ட்டில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கானது நிலுவையில் உள்ளது. இதனை தொடர்ந்து, அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி உள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் செயல்பாடுகள் தொடர்பாகவும், அதிமுகவின் பொன் விழா ஆண்டையொட்டி சிறப்பு பொதுக்கூட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வான பின் ஈபிஎஸ் தலைமையில் நடைபெறும் முதல் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story