கல்லூரியில் படிக்கும் காலத்தில் "அப்பாவிடம் மோட்டார் சைக்கிள் கேட்டு அடம்பிடித்தேன்'' எடப்பாடி பழனிசாமி


கல்லூரியில் படிக்கும் காலத்தில் அப்பாவிடம் மோட்டார் சைக்கிள் கேட்டு அடம்பிடித்தேன் எடப்பாடி பழனிசாமி
x

“கல்லூரியில் படிக்கும் காலத்தில், அப்பாவிடம் மோட்டார் சைக்கிள் கேட்டு அடம்பிடித்தேன்'', என ‘டுவிட்டர்' கலந்துரையாடல் நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை,

அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் நடைபெற்ற 'டுவிட்டர்' கலந்துரையாடல் நிகழ்ச்சியில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இளைஞர்களிடம் பேசினார்.

தனது ஆரம்பகால வாழ்க்கை, அரசியல், மறைந்த தலைவர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவுடன் பணியாற்றிய அனுபவம், பொழுதுபோக்கு, தினசரி நடவடிக்கைகள் என பலதரப்பட்ட கேள்விகளுக்கு, எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார். அவர் சில சுவராசியமான நிகழ்வுகளையும் குறிப்பிட்டார். அவர் கூறியதாவது:-

'புல்லட்' கேட்டு அடம்பிடித்தேன்

நான் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து கொண்டிருந்தபோது, எம்.ஜி.ஆரால் ஈர்க்கப்பட்டு, அவரது ரசிகனாக மாறிப்போனேன். அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கியபோது, சிலுவம்பாளையம் கிளைச்செயலாளராக எனது அரசியல் பயணத்தைத் தொடங்கினேன். என்னுடைய அனுபவம் வித்தியாசமானது.

ஆரம்பத்தில் என் தந்தை சர்க்கரை வியாபாரம் செய்துகொண்டிருந்தார். அந்த சமயம் நான் அ.தி.மு.க.வின் கிளைச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டபோது, நான் அரசியலுக்கு வருவதை அவர் வெறுக்கவில்லை. "அரசியல் என்பது உன் சொந்த விஷயம். அதில் நான் தலையிட முடியாது" என்று என்னிடம் கூறினார்.

அது நான் கல்லூரியில் படிக்கும் காலம் என்பதால் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்றுவர மோட்டார் சைக்கிள் வேண்டும், அதுவும் 'புல்லட்' வண்டி தான் வேண்டும், என்று அப்பாவிடம் கேட்டேன். அதற்கு அப்பா, "அந்த வண்டியை நீ தாங்கி பிடிக்க முடியாதேப்பா..." என்று கூறினார். ஆனாலும் நான் 'புல்லட்' தான் வேண்டும் என்று அடம்பிடித்தேன்.

உதவிக்கு ஒரு உதவியாளர்

ஒருவழியாக அப்பா எனக்கு 'புல்லட்' வாங்கி தந்தார். இதுதவிர ஒரு உதவியாளரையும் அவர் எனக்காக நியமித்தார்.

"நீ வண்டியை ஓட்டு. இறங்கும்போது, வண்டியை நிறுத்தும்போது (ஸ்டாண்ட் போடும்போதும்) அவர் உனக்கு உதவியாக இருப்பார்" என்று அப்பா என்னிடம் கூறினார். அந்த வகையில் 3 மாத காலம் எனக்கு அந்த உதவியாளர் உதவிகரமாக இருந்தார். கல்லூரிக்கும் சென்றேன். அதேவேளை அரசியலிலும் ஈடுபட்டேன்.

சுயநலம் கூடாது

எல்லா பெற்றோரும், தனது பிள்ளை நன்றாக படிக்க வேண்டும், நல்ல வேலைக்கு செல்லவேண்டும், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயற்கை. எனவே படிக்கும் காலத்தில் படிப்பில் மட்டுமே மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட வயதை எட்டும்போது அரசியலில் பயணிக்கலாம். ஏனெனில் அரசியலில் இளைஞர்களின் பங்கு மிகவும் முக்கியம். ஒவ்வொரு இளைஞரும் தேசப்பற்றும், சேவையும் கொண்டவராக இருக்கவேண்டும். சுயநலம் கூடாது.

நான் இருந்த காலம் வேறு. இப்போதுள்ள காலம் வேறு. நான் படிக்கும் காலத்தில் அரசு பள்ளிகள் குறைவு. இப்போது படிக்கும் வாய்ப்புகள் ஏராளம்.

'எனர்ஜி' தருவது எது?

அ.தி.மு.க.வினர் ஒருமனதாக என்னை பொதுச்செயலாளராக தேர்வு செய்துள்ளனர். நான் தொண்டனாக இருந்துதான் கட்சியின் பொதுச்செயலாளராக வந்திருக்கிறேன். எனவே தொண்டனின் மனநிலை எனக்கு நன்றாகவே தெரியும். பொதுச்செயலாளர் ஆனதில் இருந்தே, தொண்டர்கள் என்னைத் தேடி வந்து வாழ்த்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்கள் மனம் மகிழும் வகையில் பணியாற்ற வேண்டும் என்ற சிந்தனை மட்டுமே எனக்கு இருக்கிறது. இதுவே எனக்கு 'எனர்ஜி'யை தருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story