பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகியது அ.தி.மு.க. தொண்டர்களின் முடிவுசேலத்தில் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு


பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகியது அ.தி.மு.க. தொண்டர்களின் முடிவுசேலத்தில் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு
x

பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகியது அ.தி.மு.க. தொண்டர்களின் முடிவு என்று சேலத்தில் நடந்த கட்சி வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சேலம்

சேலம்

பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகியது அ.தி.மு.க. தொண்டர்களின் முடிவு என்று சேலத்தில் நடந்த கட்சி வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

ஆலோசனை கூட்டம்

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகும் முடிவை சமீபத்தில் அ.தி.மு.க. எடுத்தது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. எடுத்த இந்த திடீர் முடிவு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் இது குறித்து கட்சியின் பொதுச்ெசயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சூரமங்கலம் பகுதி வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் சேலம் 3 ரோட்டில் உள்ள வரலட்சுமி மகாலில் நேற்று இரவு நடந்தது. இந்த கூட்டத்தில் பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகியது குறித்து எடப்பாடி பழனிசாமி முதன்முறையாக தனது கருத்தை வெளிப்படுத்தினார். அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பேச்சு மூலம் கூட்டணி முறிவு குறித்து அவர் தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தி உள்ளார்.

கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியதில் ஏதோ பொதுச்செயலாளர் என்ற முறையில் நான் மட்டும் எடுத்த முடிவு அல்ல. 2 கோடி கட்சி தொண்டர்களின் உணர்வை பிரதிபலித்து எடுத்த முடிவு.

அ.தி.மு.க. நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் ஒன்று கூடி ஆலோசனை நடத்தி தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். ஆலோசனை கூட்டத்தில் அனைவரின் சம்மதம் இருந்தால் தான் அந்த தீர்மானத்தை நிறைவேற்ற முடியும். அதன் அடிப்படையில் பா.ஜனதா கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேறி உள்ளது.

உரிமையை பாதுகாக்க...

யார் பிரதமர் என்று கூறி தேர்தலை சந்திப்பீர்கள்? என்று சிலர் கேட்கிறார்கள். ஒடிசா, மேற்கு வங்காளம், ஆந்திராவில் பிரதமர் வேட்பாளரை அறிவித்தா தேர்தலை சந்திக்கிறார்கள்?. அந்தந்த மாநில உரிமைகளை பாதுகாக்க தேர்தலை சந்திக்கின்றனர். அதேபோல், தமிழக மக்களின் உரிமையை பாதுகாக்க அ.தி.மு.க. போராடுகிறது.

நமது உரிமையை பாதுகாக்க நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஓட்டு கேட்டு பிரசாரம் செய்வோம். அ.தி.மு.க.வை பொறுத்தவரை தமிழக மக்கள் நலன் தான் முக்கியம். அவர்கள் தான் எஜமானர்கள். அவர்களின் எண்ணங்களை தான் அ.தி.மு.க. பிரதிபலிக்கிறது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 40 இடங்களிலும் அமோக வெற்றி பெறும். இதற்காக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அயராமல் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அஸ்தம்பட்டியில்...

முன்னதாக சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அஸ்தம்பட்டி பகுதி வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் சங்கர் நகரில் உள்ள வன்னியர் திருமண மண்டபத்தில் நேற்று காலையில் நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

காலத்திற்கு ஏற்றவாறு தேர்தல் பணியாற்ற வேண்டும். தலைமை அறிவிக்கும் வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றி பெற வைக்கும் வகையில் நமது பூத் கமிட்டி உறுப்பினர்களின் செயல்பாடுகள் அமைய வேண்டும். ஒரு கட்டிடத்திற்கு அஸ்திவாரம் எப்படி முக்கியமோ, அதேப்போல, கட்சிக்கு பூத் கமிட்டி உறுப்பினர்களின் பணிகளும் முக்கியமானது.

அதாவது, தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை அழைத்து வருவது, கள்ள ஓட்டு போடுவதை தடுப்பது, புதிய வாக்காளர்களை சேர்ப்பது போன்றவை பூத் கமிட்டி உறுப்பினர்களின் பணிகள் ஆகும். எனவே நாடாளுமன்ற தேர்தலுக்கு அ.தி.மு.க.வினர் தயாராக வேண்டும்.

இந்த தேர்தல் வழக்கமான தேர்தல் மாதிரி அல்ல, சவாலான தேர்தலாக அமையும். அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றால் கட்சியினர் கடுமையான உழைப்பை வெளிப்படுத்தி அதற்கு உறுதுணையாக நிற்க வேண்டும். அனைத்து வாக்குகளும் சிந்தாமல் சிதறாமல் அ.தி.மு.க.விற்கு கிடைக்கும் வகையில் செயல்பட வேண்டும்.

குடிநீர் பஞ்சம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 36 அடிதான் உள்ளது. இன்னும் 6 அடி குறைந்தால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். சேலம் மட்டுமின்றி 24 மாவட்டங்களில் வசிக்கும் பொதுமக்கள், மேட்டூர் அணை மற்றும் காவிரி குடிநீரை நம்பி இருக்கிறார்கள். அடுத்து 7 மாதங்களுக்கு பிறகு தான் மேட்டூர் அணைக்கு பருவமழையால் தண்ணீர் கிடைக்கும்.

தற்போது நீர்மட்டம் வேகமாக குறைந்து வரும் நிலையில் மிகப்பெரிய குடிநீர் பஞ்சம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆனால் எதைப்பற்றியும் முதல்-அமைச்சருக்கு கவலையில்லை. அவருக்கு அவரது மகன் தனக்கு அடுத்து பதவிக்கு வரவேண்டும் என்பதே முக்கியமாக உள்ளது.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் பன்னீர்செல்வம், பாலசுப்பிரமணியம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. செல்வராஜூ, முன்னாள் மேயர் சவுண்டப்பன், பகுதி செயலாளர்கள் சரவணன், முருகன், பாலு, மாரியப்பன், பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜான்கென்னடி, மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் செங்கோட்டையன், தகவல் தொழில்நுட்ப அணி மாநகர் மாவட்ட செயலாளர் கனகராஜ், முன்னாள் கவுன்சிலர் கிருபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story