எடப்பாடி பழனிசாமி, முதல்-அமைச்சராவதற்கு, ஈரோடு இடைத்தேர்தல் அச்சாரமாக அமையும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு
எடப்பாடி பழனிசாமி, மீண்டும் முதல்-அமைச்சராவதற்கு ஈரோடு இடைத்தேர்தல் அச்சாரமாக அமையும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
எடப்பாடி பழனிசாமி, மீண்டும் முதல்-அமைச்சராவதற்கு ஈரோடு இடைத்தேர்தல் அச்சாரமாக அமையும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
இது குறித்து அவர் மதுரையில் கூறியதாவது:-
நேரடி போட்டி
முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் ஏற்பாட்டில், 10 ஆயிரம் பேர் அ.தி.மு.க.வில் இணையும் விழா, மதுரை வளையங்குளம் ரிங்ரோடு கருப்புசாமி கோவில் எதிரே உள்ள திடலில் வருகிற 5-ந் தேதி நடக்கிறது. இந்த விழாவுக்கு எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தற்போது நடைபெறும் ஈரோடு இடைத்தேர்தல் நேரத்தில், தொண்டர்களுக்கு உற்சாகம் ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக இது அமையும். மேலும் இந்த விழா, தென் தமிழகத்தின் வரலாற்று சிறப்புமிக்க ஒரு விழாவாக அமையும்
ஈரோடு இடைத்தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.விற்கும், தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நேரடி போட்டி நடக்கிறது. அதில் வெற்றி பெறுவதற்கான யூகம் அமைத்து எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். இந்த தேர்தலில் மெகா தேர்தல் பணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் சுமார் 8 மணி நேரம் தொண்டர்களுடன் எடப்பாடி பழனிசாமி அமர்ந்து இருந்தார். அப்போது அவர் தொண்டர்களின் ஆலோசனைகளை கேட்டறிந்தார். இந்த தேர்தலில் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் சாதனை திட்டங்களை எடுத்துரைத்து வாக்கு கேட்போம். இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி, மீண்டும் முதல்-அமைச்சராவதற்கு ஈரோடு இடைத்தேர்தல் அச்சாரமாக அமையும்
வாக்குறுதி
தி.மு.க. அரசு கடந்த 18 மாதங்களாக மக்கள் விரோதபோக்கை கடைப்பிடித்து வருகிறது. எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த திட்டங்களை தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து கொண்டு இருக்கிறார். தேர்தலின் போது தி.மு.க. கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. மீண்டும் தமிழகத்தில் எப்போது சட்டசபை தேர்தல் வரும், எப்போது தி.மு.க. ஆட்சிக்கு வீட்டுக்கு போகும் என்று மக்கள் எண்ணத்தொடங்கி விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.