கிருஷ்ணகிரி: மக்கள் போராட்டத்திற்கு வித்திட்டுள்ள அரசுக்கு கடும் கண்டனம் - எடப்பாடி பழனிசாமி டுவீட்


கிருஷ்ணகிரி: மக்கள் போராட்டத்திற்கு வித்திட்டுள்ள அரசுக்கு கடும் கண்டனம் - எடப்பாடி பழனிசாமி டுவீட்
x

கண்ணீர்புகை வீசி கட்டுப்படுத்தும் அளவிற்கு போராட்டம் வலுத்திருப்பதை உணர தவறியது உளவுத்துறையின் தோல்வி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ,ஓசூர் அருகே கோப சந்திரம் பகுதியில் சின்ன திருப்பதி கோவில் திருவிழாவையொட்டி இன்று எருது விடும் விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதற்கு, உாிய அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் விழாவையொட்டி அந்த பகுதியில் உள்ள காலி இடத்தை சீரமைத்து, தடுப்புகள் மற்றும் மேடை உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் விழாக்குழுவினர் செய்திருந்தனர். 100க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டன. காளைகளை பிடிக்க எராளமான இளைஞர்களும் அங்கு திரண்டனர். ஆனால், எருது விடும் விழாவை நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெறாததால் தடை விதிக்கப்பட்டது. அதிகாரிகளும், போலீசாரும் அங்கு வந்து விழாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை கூறி அனைவரையும் கலைந்து செல்ல அறிவுறுத்தினர். இதனால் அங்கு திரண்டிருந்த இளைஞர்கள் ஆத்திரம் அடைந்தனர். திடீரென கிருஷ்ணகிரி- ஓசூர் சாலையில் திரண்ட அவர்கள் சாலையின் நடுவே கற்களை கொட்டி போக்குவரத்தை முடக்கினர்.

மேலும் அவ்வழியாக வந்த வாகனங்களை மறித்து அவற்றின் மீது ஏறிநின்று மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி அவர்களை அங்கிருந்து விரட்டி அடித்தனர். இந்நிலையில் இளைஞர்களின் போராட்டம் எதிரொலியாக மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி எருதுவிடும் விழா நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார். ஆனாலும் போராட்டம் முடிவுக்கு வரவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் எருது விடும் விழா நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறி போராட்டத்தை தொடர்ந்தனர். ஏராளமான அரசு பஸ்கள், லாரிகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீது கல்வீசி தாக்கியதில் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இதனால் மீண்டும் அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசார் மீது கல்வீசினர். இதில் போலீசார் சிலருக்கு மண்டை உடைந்து காயம் ஏற்பட்டது.

இந்த நிலையில் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்,

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,

கிருஷ்ணகிரி,சூளகிரியில் வழக்கமாக நடக்கும் எருதுவிடும் திருவிழாவிற்கு காரணமேயின்றி அனுமதி மறுத்து,ஹோசூர் நெடுஞ்சாலையே ஸ்தம்பித்துப் போகும் அளவு மக்கள் போராட்டத்திற்கு வித்திட்டுள்ள இந்த விடியா அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்.

கண்ணீர்புகை வீசி கட்டுப்படுத்தும் அளவிற்கு போராட்டம் வலுத்திருப்பதை உணர தவறியது உளவுத்துறையின் தோல்வி.மக்கள் பிரச்சனைகளை கவனத்தில் கொள்ள வேண்டுமென இந்த நிர்வாக திறமையற்ற விடியா அரசை வலியுறுத்துகிறேன்.

1 More update

Next Story