படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
x

அரியலூர் மாவட்டத்தில் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

உதவித்தொகை

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 1.4.2023 உடன் தொடங்கும் காலாண்டிற்கு படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களிடம் இருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உதவித்தொகை பெறுவதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாத, தேர்ச்சி பெற்றவர்கள், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற பொது பிரிவினர் தங்களது கல்வித்தகுதியை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவடைந்து தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளி பதிவுதாரர்கள் தங்களது கல்வித்தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிவடைந்திருக்க வேண்டும். 31.3.2023 அன்று தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினர் 45 வயதிற்குள்ளும், இதரப்பிரிவினர் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கு உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை.

குடும்ப ஆண்டு வருமானம்

விண்ணப்பதாரர் எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் கல்வி பயிலுபவராக இருத்தல் கூடாது. ஆனால், தொலைதூர கல்வி பயிலுபவராக இருக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கு வருமான உச்ச வரம்பு ஏதும் இல்லை. வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்திற்கு உரிய விண்ணப்ப படிவத்தினை அலுவலக வேலை நாட்களில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக அடையாள அட்டையுடன் நேரில் வந்து இலவசமாக பெற்று கொள்ளலாம் அல்லது https://tnvelaivaaippu.gov.in/downloads/uaApplication.pdf என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இத்திட்டம் தொடர்பான அனைத்து விவரங்களும் மேற்படி இணையதளத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அடுத்த மாதம் (மே) 31-ந்தேதிக்குள் அனைத்து அசல் கல்வி சான்றுகள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகத்துடனும், மாற்றுத்திறனாளிகளை பொருத்தவரையில் மேற்படி சான்றுகளுடன் மாற்றுதிறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையுடனும் நேரில் வருகை புரிந்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும், ஏற்கனவே வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற்று மூன்றாண்டு முடிவுற்ற பொதுபிரிவினரும் 10 ஆண்டுகள் முடிவுற்ற மாற்றுத்திறனாளிகளும் ஏற்கனவே, வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற்று வருபவர்களும் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியதில்லை. தற்போது உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகள் சுய உறுதிமொழி ஆவணத்தினை பூர்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும், என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story